இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன் Phoenix, Arizona, USA 65-0119 1சகோ. மூர் அவர்களையும் இன்னும் அநேகரையும் மேடையின் மேல் கண்டபோது, நான் உணர்ச்சிவசப்பட்டேன். இந்நண்பர்களை நான் அநேக ஆண்டுகளாக அறிவேன். இன்றிரவு அவர்களை இங்கு காண்பதை பெருத்த சிலாக்கியமென்று கருதுகிறேன். எனக்குப் பின்னால் அமர்ந்துள்ள இத்தகைய மகத்தான வேத பண்டிதர்களின் முன்னிலையில் பேசுவதற்கு நான் மிகவும் சிறியவன் என்று உணருகிறேன். நான் எதையாகிலும் தவறாகக் கூறினால், அவர்கள் என்னைத் திருத்துவார்களென்று நம்புகிறேன். ஒரு குறிப்பிட்ட நபர் இங்கு வந்துள்ளதைக் குறித்து நாங்கள் இன்றிரவு மிக மகிழ்ச்சி கொள்கிறோம் - சகோதரி ரோஸ். நாங்கள் வந்து கொண்டிருந்த போது... சகோ. ஷோர்ஸ் அவர்களுடனும் அவருடைய உதவியாளருடனும் பகல் உணவு அருந்திவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது, சகோதரி ரோஸ் மிகவும் வியாதியுற்றிருப்பதாக சகோ. வில்லியம்ஸ் கூறினார். அவளைக் காண நாங்கள் சிறிது நேரம் அங்கு சென்றிருந்தோம். அவள் உண்மையாகவே மிகவும் வியாதிப்பட்டிருந்தாள். அவளுக்கு கடுமையான ஜுரம் இருந்தது. நாங்கள் முழங்காற்படியிட்டு, ஒரு சில வார்த்தைகளை ஜெபத்தில் கூறினோம். ஆண்டவர் எங்களுடன் பேசி, “அவள் சுகமடைந்து, நாளை இரவு கூட்டத்திற்கு வருவாள்'' என்று கூறினார். இதோ அவள் இன்றிரவு இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். 2சகோதரி ரோஸ், எழுந்து நில். எல்லோரும் உன்னைக் காணட்டும். நாங்கள் ஆண்டவருக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்... அவள் படுத்த படுக்கையாய் இருந்தாள். அவள், “பிசாசு என்னை மேற்கொண்டுவிட்டான். இங்கு வந்ததும், எனக்கு வியாதி வந்துவிட்டது'' என்றாள். ஏதோ தொண்டை சம்பந்தமான நோய். ஆனால் ஆண்டவர் அவளை சுகமாக்கி இங்கு கொண்டு வந்துவிட்டார். அதற்காக நாங்கள் மகிழ்ச்சியடைந்து, அன்புள்ள ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறோம். நாம் அற்புதமான நேரங்களைக் கழித்தோம், நாளை இரவு நாங்கள் ரமாதாவுக்கு செல்கிறோம். மறக்கவேண்டாம், நாளை இரவு கூட்டம் இங்கில்லை. ரமாதாவில் நடைபெறும். கன்வென்ஷன் கூட்டங்கள் அதற்கு அடுத்த இரவு ஆரம்பமாகின்றன. ஆகவே இன்னும் ஒரு இரவு நீங்கள் என்னுடன் பொறுத்துக் கொள்ள வேண்டும். 3நேற்று இரவு நான் அதிக நேரம் பேசிவிட்டேன்... இந்த ஆண்டு தொடக்கத்தில், இனிமேல் நான் மூன்று, நான்கு, ஐந்து மணி நேரம் பிரசங்கம் செய்வதற்குப் பதிலாக, முப்பது அல்லது நாற்பது நிமிடங்கள் மாத்திரமே பிரசங்கம் செய்வேன் என்னும் தீர்மானம் செய்தேன். நேற்று இரவு நான் உங்களிடம் கூறின விதமாக, ஞாயிறன்று என் மனைவி, “நீங்கள் உண்மையாகவே அதை கடைபிடித்தீர்கள்'' என்றாள். ஆனால் நேற்று இரவு அதை நான் பாழாக்கிவிட்டேன். முப்பது நிமிடங்களுக்குப் பதிலாக நான் ஐம்பது நிமிடங்கள் பேசி விட்டேன். இன்றிரவு நாங்கள் வந்து கொண்டிருக்கும் போது பில்லி, “நீங்கள் எந்த பொருளின் மேல் பேசப் போகிறீர்கள்?'' என்று கேட்டான். நான், “நான்கு, ஐந்து வெவ்வேறு பொருள்களின் பேரில் குறிப்புகளும் வேத வாக்கியங்களும் எழுதி வைத்திருக்கிறேன். அங்கு சென்ற பின்பு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்'' என்றேன். அவன், “வியாதியஸ்தருக்கு ஜெபம் செய்வதாக நீங்கள் வாக்களித்துள்ளீர்கள்'' என்றான். நான், “ஆம், ஐயா! எவ்வளவு அட்டைகள் வைத்திருக்கிறாய்?'' என்று கேட்டேன். “இருநூறு'' என்று பதிலளித்தான். “அப்படியானால் இன்றிரவு ஜெபிக்கத் தொடங்கிவிடலாம்'' என்றேன். அவன், “உங்களுக்குப் பேச பதினைந்து நிமிடங்கள் மாத்திரமே அவகாசம் உண்டு. ஏனெனில் மிச்ச நேரத்தை நீங்கள் நேற்று இரவே பேசி தீர்த்துவிட்டீர்கள்'' என்றான். (சகோ. பிரான்ஹாமும் சபையோரும் சிரிக்கின்றனர் - ஆசி). பதினைந்து நிமிடங்கள். நாம் துரிதமாக முடிக்க வேண்டும். இல்லையா? 4ஜெப அட்டைகள் வைத்திருப்பவர்களுக்கு நாங்கள் ஜெபம் செய்வதாக வாக்களித்திருந்தோம். எங்கள் வாக்கை நிறைவேற்ற நாங்கள் நிச்சயம் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்கள் அனைவரையும் இந்த வரிசையில் கொண்டு வர முடியாது. கூட்டத்திலிருந்து அவர்கள் பெயர்களைக் கூப்பிட்டு அவர்களைத் தனிப்பட்ட விதத்தில் அழைக்கவும் முடியாது. பரிசுத்த ஆவியானவர் அதை எனக்கு அருளுவார் என்றாலும், என்னால் அப்படி செய்ய முடியாது. ஏனெனில் அது எனக்கு அதிக பாரமாயிருக்கும். இப்படிப்பட்ட செயல்களைப் பரிசுத்த ஆவியானவர் புரிவதை நாம் நன்கு அறிந்திருக்கிறோம். தேவன் இன்னமும் தேவனாயிருக்கிறார் என்று நாமறிவோம். அது சுகமளிக்கிறது என்பதல்ல முக்கியம். நாம் அவருடைய சமூகத்தில் இருக்கிறோம் என்பதை அது நமக்குத் தெரிவித்து, நமது விசுவாசத்தை அதிகரிக்கச் செய்கிறது. இன்றிரவு நாங்கள் எல்லா வியாதியஸ்தர்க்கும் ஜெப அட்டை வைத்துள்ள ஒவ்வொருவருக்கும் ஜெபிக்கப் போகிறோம். நாளை இரவு ரமாதாவில் இன்னும் சில அட்டைகளை விநியோகம் செய்து, அவர்களுக்கும் அங்கு ஜெபம் செய்வோம். ஏனெனில் கன்வென்ஷன் கூட்டங்களுக்கு முன்பு இன்னும் ஒரு இரவு உள்ளது, கன்வென்ஷனில் எனக்கு ஒரு இரவு அளிக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். அதை தவிர காலை உணவு ஆராதனை ஒன்று இருக்கும் என்றும் தோன்றுகிறது. அங்கு காரியங்கள் எப்படியிருக்கும் என்பதைப் பொறுத்தது... 5பேச்சாளர்களில் ஒருவர் இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன், சகோ. ஹம்பர்க் (ஒரு சகோதரன், அவர் பெயர் 'அம்பர்கி' என்கிறார் - ஆசி). அம்பர்கி, காஷ் அம்பர்கி. நான் அதை எப்பொழுதும் தவறாக உச்சரிக்கிறேன். அது ஜெர்மானிய பெயர்... அது ஜெர்மானிய பெயர் என்று நினைக்கிறேன். எனவே நான் ஒரு விதமாக அழுத்தம் திருத்தமாக கூற வேண்டியதாய் இருந்தது - காரணம் (அவ்விதமாக கூறினதை மன்னிக்கவும்) அவருக்காக அப்படி செய்ய வேண்டியதாய் போனது. நாம் கர்த்தருக்குள் அற்புதமான நேரத்தைக் கழித்தோம். இன்றிரவு அந்நியர் யாராகிலும் இங்கிருப்பார்களானால், நீங்கள் வந்திருப்பதைக் குறித்து மகிழ்ச்சியடைகிறோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரென்று நம்புகிறோம். இன்றிரவு இவ்விடம் விட்டு செல்லும்போது, கட்டிடத்தில் வியாதியஸ்தர் ஒருவராகிலும் இருக்கக் கூடாது என்றும், கர்த்தர் தாமே தமது மகத்தான வல்லமையுடன் இறங்கி வந்து, வியாதிப்பட்டு அவதியுறும் அனைவரையும் சுகமாக்க வேண்டுமென்றும் ஜெபிக்கிறேன். 6சில நாட்களுக்கு முன்பு, கடினமான 'கேஸ்'களை நான் விசேஷித்த பேட்டிகளில் அழைத்து அவர்களுடன் பேசுவதுண்டு. அதன் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வந்தது. கர்த்தர் அதை ஆசீர்வதித்துக் கொண்டே வந்தார். முடிவில் முன்னூறு அல்லது நானூறு பேர் பேட்டிகளுக்காக காத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. இதன் காரணமாக, அவர்கள் மனது புண்பட்டது. பேட்டிக்காக அவர்களுடைய அழைப்பு வருவதற்கு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. நாங்கள் அமர்ந்திருந்து அந்த 'கேஸ்' என்னவென்று அவர் கூறும் வரைக்கும் காத்திருப்போம். இத்தகைய விசேஷித்த பேட்டிகளில் பங்கு கொண்டவர்கள் இன்றிரவு இங்கு அமர்ந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அப்படி யாராகிலும் இருந்தால் உங்கள் கைகளையுயர்த்துங்கள். ஆம், உட்கார்ந்திருக்கின்றனர். நான் கூறுவது உண்மையென்று அவர்களுக்குத் தெரியும். ஆண்டவர் என்ன கூறுவார் அது என்ன 'கேஸ்' என்று கூறுவார் என்று நாங்கள் காத்திருப்போம். சில நாட்களுக்கு முன்பு நாங்கள் இந்த விசேஷித்த பேட்டிகளை நிறுத்திவிட்டோம். இத்தகைய தனிப்பட்ட பேட்டி இனி வைக்க முடியாது என்று நான் பில்லியிடம் கூறினேன். 7பாருங்கள், இப்பொழுது தான் நான் இரண்டாம் தடவையாக இருபத்தைந்து வயதைக் கடந்தேன், மூன்றாம் தடவையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன். நமக்கு வயதாகுந்தோறும், முன்புபோல் காரியங்களைச் செய்ய முடிவதில்லை. நமது அடிகள் குறுகிக் கொண்டே செல்கின்றன. சகோ. மூர் ஏறக்குறைய என் வயதாயிருந்தாலும், இன்னும் அதைக் குறித்து அவருக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் நீங்களும் நானும், சகோ. பிரவுனும் முதன் முறையாக இங்கு சகோ. அவுட்லா, சகோ. கார்சியா, சகோ. ஃபுல்லர் இவர்களுடன் வந்த முதற்கொண்டு, காலம் அதிகம் கடந்துவிட்டது. இந்த சகோதரர்கள் இங்குள்ளனரா என்று தெரியவில்லை. சகோ. கார்சியா, சகோ. ஃபுல்லர், சகோ. அவுட்லா இங்குள்ளனரா? இருந்தால், உங்கள் கைகளையுயர்த்துங்கள். ஆம், சகோ. ஃபுல்லர் இங்கு இருக்கிறார். சகோ. அவுட்லாவை அங்கு காண்கிறேன். சகோ. கார்சியா பீனிக்ஸை விட்டு சென்று இப்பொழுது கலிபோர்னியாவில் இருக்கிறார். அது மிகவும் கம்பீரமான நாட்கள். அன்று நான் கொண்டிருந்த அதே செய்தியையே இன்றும் கொண்டிருக்கிறேன் அதாவது, “இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்னும் செய்தியை ஏறக்குறைய பத்தொன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. அப்பொழுது பெக்கி சிறு குழந்தையாயிருந்தாள். இப்பொழுதோ அவள் பத்தொன்பது வயது நிரம்பிய தடித்த, விகாரமான பெண்ணாய் அங்கு எங்கோ அமர்ந்திருக்கிருள் பெக்கி எங்கிருக்கிறாய்? அப்படி அவளை அழைத்ததனால் அவள் என் மீது கோபித்துக் கொள்வாள். அவளை என் கையிலேந்தி பிரதிஷ்டை செய்த நாள் என் ஞாபகத்திற்கு வருகிறது. இன்றிரவும் கூட அத்தகைய பணி எனக்கு உண்டாயிருக்கும் என்று நினைக்கிறேன். 8சகோ. கார்சியாவின் சபையில் ஒரு இரவு பெக்கி குழந்தையாயிருந்த போது இவ்விதம் பிரசங்கித்தேன்: “இன்றிரவு நான் சர்வதேச கூட்டம் ஒன்றில் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறேன். நான் ஸ்பானியர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். இங்குள்ள என் மனைவி ஜெர்மானிய தேசத்தாள். நான் அயர்லாந்து நாட்டான். என் சிறு குழந்தை பெக்கி சிகப்பு இந்தியன்” என்றேன். நான் பின்பக்கம் சென்றபோது, மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த பெண் ஒருத்தி என்னை அணுகி, “சகோ. பிரான்ஹாமே'' என்றாள். நான், “ஆம் தேனே, என்ன வேண்டும்?'' என்றேன். அவள், “உங்கள் குழந்தை வெள்ளை நிறமாயிருக்கிறாளே! அவள் எப்படி சிகப்பு இந்தியனாக இருக்க முடியும்?'' என்று கேட்டாள். நான், “அவள் நடத்தையில் சிகப்பு இந்தியன்'' என்றேன். சரி, இன்றிரவு மறுபடியுமாக இங்கு வந்திருப்பதில் நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். நாம் வார்த்தையை அணுகும் முன்பு, அவரை அணுகுவோம். ஏனெனில் அவரே வார்த்தையாயிருக்கிறார். வார்த்தை வெளிப்படும்போது, அது தான் உங்களிலிருக்கிறவர். 9நேற்றிரவு நாம் “முரண்பாட்டின் வித்து'' என்பதைக் குறித்து பேசினோம். கர்த்தருடைய ஆசீர்வாதத்தை நீங்கள் அனுபவித்தீர்களா? (”ஆமென்''). அந்த செய்தியை உங்ளுக்குக் கொண்டு வந்ததில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். வித்துக்கள் என்னவென்பதை நாம் பார்க்கிறோம். உங்களுக்கு இன்றிரவு விசேஷித்த விண்ணப்பங்கள் ஏதாகிலும் உண்டா? ஜெப வரிசைக்கு வரப் போகிறவர்கள், “தேவனே, இரக்கமாயிரும். நான் ஜெபத்திற்காக வரும்போது, உமது நிபந்தனையை சந்திக்கத் தக்கதாக என் விசுவாசத்தை உயர்த்துவீராக!'' என்று ஜெபியுங்கள். ஒருக்கால் நீங்கள் சிநேகிக்கிறவர்கள் வியாதியாயிருக்கக் கூடும். தேவன் காணத் தக்கதாக உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா? உயர்த்தப்பட்ட அநேக கரங்களைக் காணும் போது, என்னில் பொங்கியெழும் உணர்ச்சி என்னவென்று உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். போதகர் சகோதரரே, அந்த தேவைகளைப் பாருங்கள். அதை சற்று பாருங்கள். எனக்கே அத்தகைய உணர்ச்சி உண்டாகுமானால், நமது பிதாவின் உணர்ச்சி எப்படிப்பட்டதாயிருக்கும்? நிச்சயமாக, நாம் ஜெபம் செய்வோம்: 10அன்புள்ள இயேசுவே, எல்லாவற்றிற்கும் போதுமான உமது நாமத்தின் மூலம் மகத்தான இரக்கத்தின் சிங்காசனத்தை அணுகுகிறோம். “நாம் இரட்சிக்கப்படும்படிக்கு மனுஷர்களுக்குள்ளே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை”. அவருடைய நாமத்தைக் கொண்டவர்களாய் நாங்கள் வருகிறோம். பரலோகப் பிதாவே, இன்றிரவு எங்களை உமது விசுவாசிக்கும் பிள்ளைகளாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். ஆண்டவரே, எங்கள் அவிசுவாசத்தை மன்னியும். எங்கள் தேவைகள் அனைத்திற்காகவும் இன்றிரவு தேவனுடைய வார்த்தையை முற்றிலுமாக விசுவாசிக்க உதவி செய்யும். உயர்த்தப்பட்ட கரங்களின் கீழ் இருப்பது என்னவென்பதை நீர் அறிவீர். ஒருக்கால் சிலருக்கு அது வியாதியாயிருக்கலாம், சிலருக்கு குடும்பப் பிரச்சினையாயிருக்கலாம், வேறு சிலருக்கு பணத் தொல்லையாயிருக்கலாம். மற்றும் சிலர் சோர்ந்து போயிருக்கலாம், சிலர் பின்வாங்கிப் போயிருக்கலாம், சிலர் பாவிகளாயிருக்கலாம். தேவை என்னவாயிருப்பினும், எந்த சத்துருவையும் மேற்கொள்ள வல்லமை படைத்தவர் நீர். எனவே, மரணம் உட்பட எங்கள் ஒவ்வொரு சத்துருவையும் இன்றிரவு நாங்கள் அடையாளம் கண்டு கொண்டு, நம்மில் அன்புகூர்ந்து, தம்மையே நமக்காக கொடுத்து, தம்முடைய இரத்தத்தினாலே நம்மைக் கழுவின அவராலே நாம் முற்றிலும் ஜெயங் கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம் என்று உணர அருள் புரியும். 11ஆண்டவரே, எல்லா அவிசுவாசமும், எல்லா சந்தேகங்களும், எல்லா ஏமாற்றங்களும், தேவனுக்குப் பிரியமில்லாத எல்லா காரியங்களும் எங்களை விட்டகன்று, பரிசுத்த ஆவியானவர் உரிமையுடன் எங்கள் இருதயங்களில் பிரவேசிக்க வேண்டுமென ஜெபிக்கிறோம். அதிசயமான விதங்களில் அவர் எங்களுடன் பேசுவாராக. அவருடைய வல்லமையில் அவர் எங்களுடன் பேசுவாராக. ஆவிக்குரிய பிரகாரம் மரித்தவர்களை அவர் உயிரோடெழுப்பி, வியாதியால் அவதியுறுபவர்க்கு அவர் மீண்டும் சுகத்தையளித்து, நெகிழ்ந்த கால்களையும் தளர்ந்த கரங்களையும் உயர்த்துவாராக. குதூகலமான நேரம் ஒன்று உண்டாகட்டும். ஆண்டவரே, இன்றிரவே அது உண்டாகி, ரமாதா சத்திரத்தை அது அடைந்து, அந்த பட்டினத்தில் அதுவரை நிகழ்ந்த கன்வென்ஷன்களிலேயே மிகவும் சிறந்த கன்வென்ஷனை அது தொடங்குவதாக, “உமது நாமம் தரிக்கப்பட்ட ஜனங்கள் ஒன்று கூடி ஜெபிக்கும் போது, பரலோகத்திலிருந்து அவர்களுடைய ஜெபத்தைக் கேட்பேன்'' என்று நீர் வாக்கருளியிருக்கிறீர். இன்றிரவு அது நிறைவேற ஜெபிக்கிறோம். பிதாவே, இப்பொழுது நாங்கள் வார்த்தையை படிக்கும் போது, உம்மைத் தவிர வேறு யாரும் அதை வியாக்கியானப்படுத்தித் தர முடியாது. நீரே உம்முடைய சொந்த வியாக்கியானி. இன்றிரவு நாங்கள் படிக்கும் வார்த்தையை நீரே வியாக்கியானப்படுத் தர வேண்டுமென்று ஜெபிக்கிறோம். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 12போதகர் படிக்கும் வார்த்தைகளை நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால் எபேசியர் நிருபத்திற்கு உங்கள் வேதத்தை திருப்புங்கள். சென்ற ஞாயிறன்று நான் எபேசியர் நிருபத்தைக் குறித்து பேசினபோது, எப்படி யோசுவாவின் புத்தகம் பழைய ஏற்பாட்டின் எபேசியராகத் திகழ்கிறது என்றும், அது மீட்பின் புத்தகமென்றும் எடுத்துரைத்தேன். 'மீட்பு' என்னும் சொல்லுக்கு இரண்டு பாகங்கள் உள்ளன; 'வெளியே வருதல்', 'உள்ளே செல்லுதல்'. முதலாவதாக நீங்கள் வெளியே வர வேண்டும். சிலர் வெளியே வரும்போது தங்களுடன் உலகத்தையும் கூட கொண்டு வர விரும்புகின்றனர். நீங்கள் கிறிஸ்துவுக்குள் செல்ல வேண்டுமானால், உலகத்தை விட்டு வெளியே வர வேண்டும். உங்கள் வழியில் வேறொன்றும் இருக்கக் கூடாது. உண்மையான விசுவாசத்தைப் பெற்றிருக்க, தேவனுடைய வார்த்தைக்கு முரணாயிருப்பவை அனைத்தையும் நீங்கள் விட்டுவிட்டு, விசுவாசத்திற்குள் செல்ல வேண்டும். யோசுவாவின் புத்தகமே பழைய ஏற்பாட்டின் எபேசியரின் நிருபம். நியாயப்பிரமாணத்திற்கு பிரதிநியாக இருந்த மோசே யாரையுமே இரட்சிக்க முடியவில்லை. ஆனால் கிருபையோ இரட்சிக்க முடியும். “யோசுவா, இயேசு என்னும் இவ்விரண்டு சொற்களும் ஒரே அர்த்தங்கொண்டவை யேகோவா என் இரட்சகர்''. இப்பொழுது வேறொரு எபேசியருக்கு நாம் வந்திருப்பதை நாமறிகிறோம், புத்தி கூர்மையுள்ள நமது ஸ்தாபன அதன் கல்வி முறைகளும் யோர்தானை அடைந்துள்ள போது, நமக்கு வேறொரு 'எபேசியர்' இருக்க வேண்டும். நமக்கு ஒரு பிரயாணம் அவசியம், 'நாம் வெளியே வந்து', எடுத்துக்கொள்ளப்படுதலுக்காக 'உள்ளே செல்ல வேண்டும்'. 13இன்றிரவு நாம் எபேசியர் 2-ம் அதிகாரத்திலிருந்து ஒரு பாகத்தை வாசிக்கப் போகிறோம். நீங்கள் வேதாகமத்தை திருப்பி எபேசியர் நிருபத்தை கண்டு பிடிக்கும் வரைக்கும், இவைகளை நான் உங்களிடம் பேசலாமென்று எண்ணினேன். “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்ற படியாகவும், கீழ்ப்படியாயிமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியை செய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்ற படியாகவும் நடந்து கொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப் போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். தேவனோ இரக்கத்தில் ஐகவரியமுள்ளவராய் நம்மில் அன்பு கூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனே கூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்''. எபே. 2:1-5. 14இதிலிருந்து, ஒரு வேத வாக்கியத்தின் பாகத்தை என் பொருளுக்கு தலைப்பாக தெரிந்துகொள்ளப் போகிறேன்... “இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன்.'' அப்போஸ்தலனாகிய பவுல் இங்கு கூறுவதைக் கவனியுங்கள்: ''அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். நாம் முற்காலத்தில் இவ்வுலக வழக்கத்திற்கேற்ற படியாகவும், மாமிச இச்சையின் படியும் நடந்து, நமது மாமிசமும் மனதும் விரும்பினவைகளைச் செய்தோம்.'' ஆனால் நம்மில் மாறுதலை உண்டாக்கினது எது? ஒரு காலத்தில் மரித்த நிலையிலிருந்த நம்மை உயிர்ப்பிக்கப்பட்ட நிலைக்கு மாற்றியது எது? மரணத்திலிருந்து ஜீவனுக்கு மாறுதல் ஏற்பட்டது. மரணத்திலிருந்து ஜீவனுக்கு ஏற்படும். மாறுதலைக் காட்டிலும் வேறெந்த பெரிய காரியமும் ஒரு மனிதனுக்கு நேர முடியாது. ஒரு மனிதன் மரணத்தருவாயில் இருக்கும்போது, அவன் சரீர சுகம் பெற்றால், அது ஒரு பெரிய காரியம். ஆனால் ஆவிக்குரிய பிரகாரம் மரித்திருக்கும் மனிதன் ஒருவனை தேவன் உயிர்ப்பிக்கிறதைக் காட்டிலும் பெரிய காரியம் வேறு எதுவுமில்லை. 15“நீங்கள் முற்காலத்தில் மரித்தவர்களாயிருந்தீர்கள்.'' நீங்கள் மரித்தவர்களாயிருந்தீர்கள். இங்குள்ள அநேகர் பின் நோக்கிப் பார்த்து, அவர்கள் மரித்தவர்களாயிருந்ததைக் காணலாம். ஆனால் இன்றிரவு நீங்கள் ஏன் மரித்தவர்களாய் இல்லை? நீங்கள் பாவிகளாயிருந்த காரணத்தால், அந்நிலையில் இருக்கும் தகுதியைப் பெற்றிருந்தீர்கள். ”ஆனால் தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய்“ அதுதான். நாம் அப்படிப்பட்ட நிலையில் இருந்தோம், ''ஆனால் தேவனோ”! அதுதான் அங்கேயே நம்மில் மாறுதலை உண்டாக்கினது. ''தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய்“! ஓ, அதற்காக நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் அவர் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராயிருப்பதால். அவர் பணத்தில் மாத்திரம், பொருளில் மாத்திரம் ஐசுவரியமுள்ளவராயிருந்தால்! அவர் அவ்வனைத்திலும் ஐசுவரியமுள்ளவராயிக்கிறார். ஆனால் எல்லாவற்றையும் விட மேலானது இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராயிருப்பதே! அது எவ்வளவு மகத்தான வார்த்தை! நாம் முற்காலத்தில் மரித்தவர்களாயிருந்தோம். 16விதை சாகவேண்டும் என்பதைக் குறித்து அன்றொரு இரவு நாம் பேசினோம். அந்த ஜீவ அணுவைச் சுற்றியுள்ள எல்லாமே சாகவேண்டும் என்பது மாத்திரமல்ல, அது செத்து அழுக வேண்டும். அது அழுகாமல் போனால் ஜீவிக்க முடியாது. 'அழுகுதல்' என்பது முழுவதுமாக 'அழிந்து போதல்' என்று பொருள்படும். அது போன்று, நமது சொந்த கருத்துக்களும் சிந்தனைகளும் முழுவதுமாக அழுகி அழிந்து போகும் நிலைக்கு வரும் வரைக்கும், நமக்குள் இருக்கும் ஜீவ அணு உயிர் பெற்று வாழ முடியாது. இங்கு ஒரு போதகத்தை புகுத்த விரும்புகிறேன். இந்த போதகத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் பரவாயில்லை. ஆனால் நான் இந்த போதகத்தை விசுவாசிக்கிறேன். அதாவது, இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், தேவனுடைய முன்னறிவு (foreknowledge) இல்லாமல் இவ்வுலகில் தோன்ற முடியாது. ஏனெனில் அவர் முடிவற்றவர். அவருக்கு எல்லாம் தெரியும். அக்குழந்தை இவ்வுலகில் பிறக்கும் போது, அதற்குள் ஏதோ ஒன்றுள்ளது. அது ஜீவிக்க வேண்டுமானால், அதற்குள் சிறிய ஏதோ ஒன்று இருக்க வேண்டும். அந்த சிறிய வித்து அவனுக்குள் இருக்கிறது... வேத வாக்கியங்கள் அதைக் குறித்து தெளிவாகக் கூறுகின்றன. 17அதுபோன்று, நமக்கு நித்திய ஜீவன் இன்று இருக்குமானால், நாம் எக்காலத்திலும் இருந்தோம் என்று அர்த்தமாகிறது. ஏனெனில் ஒரே ஒரு நித்திய ஜீவன் மாத்திரமேயுண்டு, நாம் எல்லா காலங்களிலும் இருந்தோம். அப்படி இருக்கக் காரணம் நாம் தேவனின் ஒரு பாகமாக இருப்பதால். தேவன் ஒருவர் மாத்திரமே நித்தியமானவர். மெல்கிசேதேக்கு ஆபிரகாமிடம் தசமபாகம் வாங்கினது போல். மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு எதிர் கொண்டு போன போது, லேவி ஆபிரகாமின் அரையிலிருந்தபடியால், அவனும் தசமபாகம் செலுத்தினான் (எபி.7:9-10). வேறொரு இடத்தில், ஒரு காலை நேரத்தில் ''யார் இந்த மெல்கிசேதேக்கு'' என்பதைக் குறித்து பேச விரும்புகிறேன். இதை கவனியுங்கள், லேவி இவ்வுலகில் தோன்றுவான் என்று தேவனுக்கு அநேக ஆண்டுகளுக்கு முன்பே தெரியும். அவர் எல்லாம் அறிந்தவர். நாம் தேவனின் ஒரு பாகமாக இருக்கிறோம். நீங்கள் எக்காலத்தும் அப்படித்தான் இருந்து வந்திருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு அது ஞாபகமில்லை. ஏனெனில் நீங்கள் தேவனுக்குள் அவருடைய ஒரு தன்மையாக (attribute) மாத்திரமே இருந்தீர்கள். அவருடைய சிந்தனையில் மாத்திரம் நீங்கள் இருந்தீர்கள். உங்கள் பெயர் எப்பொழுதாகிலும் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தால், அது உலகத்தோற்றத்துக்கு முன்பே எழுதப்பட்டுவிட்டது. நீ என்னவாயிருப்பாய் என்று அவருக்குத் தெரியும். 18போதகத்தைக் குழப்புவதற்கென இதை கூறவில்லை. அதை தெளிவாக்கவே இதை கூறுகிறேன். அதன் விளைவாக நம் பயம் தெளிந்து விடும். நீ யாரென்று உனக்குத் தெரியவில்லை. நீ இனிமேல் தேவ புத்திரனாகப் போவதில்லை. இப்பொழுதே நீ தேவனுடைய குமாரனாயிருக்கிறாய். பாருங்கள், நீங்கள் எக்காலத்தும் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்கள். ஆதியில் தேவன் உங்களைத் தம் சிந்தையில் கொண்டிருந்த போது, உங்களுக்குள் இருக்கும் அந்த ஜீவன் அப்பொழுதே தேவனுக்குள் இருந்தது. நீங்கள் இவ்வுலகில் தோன்றும் முன்பே; தேவனைத் தவிர வேறொன்றும் இவ்வுலகில் இல்லாதபோதே, நீங்கள் அவருடைய தன்மைகளில் (attributes) ஒன்றாயிருந்தீர்கள். உங்கள் பெயர் என்னவென்பதை அவர் அப்பொழுதே அறிந்திருந்தார். உங்கள் தலைமயிரின் நிறம் என்னவாயிருக்கும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். உன்னைக் குறித்து அவர் எல்லாமே அறிந்திருந்தார். நிகழ்ந்த ஒன்றே ஒன்று என்னவெனில், நீ பாவியாயிருந்த காரணத்தால்... 19உங்களில் அநேகர் இந்த என் கருத்துடன் இணங்குவீர்கள். நீங்கள் சிறு பையனாக அல்லது சிறு பெண்ணாக இருந்த போது, மற்ற சிறுவர்களைத் தொல்லைப்படுத்தாத சில செயல்கள் உங்களைத் தொல்லைப்படுத்தின. உங்களுக்குள் இருந்த ஏதோ ஒன்று அதற்கு விரோதமாக கூக்குரலிட்டது. தேவன் எங்கோ இருந்தார், ஆயினும் நீங்கள் பாவிகளாயிருந்தீர்கள். அந்த அனுபவம் உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? (சபையோர், 'ஆமென்' என்கின்றனர் - ஆசி). நிச்சயமாக, அது என்ன? அது தான் அப்பொழுது உங்களுக்குள் சிறு உருவத்திலிருந்த ஜீவன். சற்று பின்பு, நீங்கள் சுவிசேஷத்தைக் கேட்டீர்கள். நீங்கள் ஒருக்கால் சபைக்குச் சென்று, இதையும் அதையும் கிரகித்துக் கொண்டிருக்கலாம். நீங்கள் ஒரு ஸ்தாபனத்தை விட்டு மற்றெரு ஸ்தாபனத்திற்கு சென்றிருக்கலாம். நீங்கள் தேவனுடைய ஒரு பாகமாயிருந்த காரணத்தால், வார்த்தையின் ஒரு பாகமாகவும் இருந்தீர்கள். ஆனால் ஒரு நாள், நீங்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்டபோது, நீங்கள் எங்கிருந்து வந்திருக்கிறீர்கள் என்றும், சத்தியம் என்னவென்றும் அறிந்து கொண்டீர்கள். உங்களுக்குள் அந்த வித்து எப்பொழுதுமே இருந்தது. உலகத் தோற்றத்துக்கு முன்பு உங்களுக்குள் இருந்த அந்த வார்த்தையை தேவனுடைய வார்த்தை கண்டது. அப்பொழுது நீங்கள் அதற்குள் வந்தீர்கள். 20நான் கூறும் அந்த கழுகுக் குஞ்சின் கதையைப் போல். அந்த கழுகுக் குஞ்சை ஒரு பெட்டை கோழிகுஞ்சு பொறித்தது. அது கோழிக்குஞ்சுகளுடன் நடந்து கொண்டிருந்தது. பெட்டைக் கோழி இடும் சத்தம் என்னவென்று கழுகுக் குஞ்சுக்கு புரியவேயில்லை. கோழிக்குஞ்சுகள் தங்கள் தீனியை கொட்டகையில் பொறுக்கித்தின்றன. அவைகளால் எப்படி பொறுக்கித் தின்ன முடிகிறதென்று கழுகுக் குஞ்சுக்கு புரியவேயில்லை. அதற்குள் இருந்த ஏதோ ஒன்று கோழிக்குஞ்சின் தன்மையை விட வித்தியாசமானதாய் இருந்தது. ஏனெனில் தொடக்கத்திலேயே அது கழுகாக இருந்தது. அது உண்மை. ஒரு நாள் அந்த கழுகுக் குஞ்சின் தாய் அதை தேடிக் கொண்டு வந்தது. தாய் கழுகின் சத்தத்தை அது கேட்டது. அது பெட்டைக் கோழியின் சத்தத்தை விட வித்தியாசமானதாய் இருந்தது. மறுபடியும் பிறந்த ஒவ்வொரு விசுவாசிக்கும் அது அப்படித்தான் உள்ளது. நீங்கள் வேத தத்துவம் எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம். மனிதனால் ஏற்படுத்தப்பட்ட முரண்பாடுகளை நீங்கள் கேட்கலாம். ஆனால் வார்த்தை அங்கு பிரகாசிக்கும் போது; ஏதோ ஒன்று உன்னை இறுகப் பற்றிக் கொள்கிறது. நீ அதற்குள் வந்துவிடுகிறாய். அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த உங்களை அந்த ஜீவனை அவர் உயிர்பித்தார். ''உயிர்ப்பிக்க முதலாவதாக அங்கு ஒரு ஜீவன் இருக்க வேண்டியது அவசியம். தேவன் தமது முன்னறிவின்படி எல்லாவற்றையும் அறிந்திருந்தார். நாம் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாவதற்கு முன்குறிக்கப்பட்டிருந்தோம். “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த நாமெல்லாரும் முற்காலத்தில் அப்படியிருந்தோம், ஆனால் அவர் உயிர்ப்பித்தார்.'' 21பவுலைப் பாருங்கள். அவன் ஒரு மகத்தான வேத பண்டிதனாயிருந்தான். ஆனால் அவன் வார்த்தையாகிய இயேசுவை சந்தித்தபோது, அது அவனை உயிர்ப்பித்தது. அவன் உடனே ஜீவனுக்குள் வந்துவிட்டான். ஏனெனில் அவன் அதற்கென முன்குறிக்கப்பட்டிருந்தான்... அவன் வார்த்தையின் ஒரு பாகமாயிருந்தான். வார்த்தை வார்த்தையைக் கண்ட போது, அது அவனுடைய தன்மையாயிருந்தது. வைதீக சபைகளில் அவன் கேட்ட பெட்டைக் கோழிகளின் சத்தம் எதுவும் அவனை பாதிக்கவில்லை. அவன் வார்த்தையைக் கண்டான். அவன் அதன் ஒரு பாகமாயிருந்தான். அவன் ஒரு கழுகு. அவன் கோழிக்குஞ்சு அல்ல. கோழிக் குஞ்சுகளுடன் அவன் புழக்கடையில் இருந்தான். ஆனால்! தொடக்கத்திலேயே அவன் கழுகாக இருந்தான். 22இதைப் போன்ற வேறொரு சிறு கதையை நான் கேட்டதுண்டு. ஒரு சமயம் வாத்துக்குஞ்சை ஒரு பெட்டைக் கோழி குஞ்சு பொறித்ததாம். காண்பதற்கு அது விகாரமாயிருந்தது. அதற்கு தூசு போன்றவை ஒன்றுமே புரியவில்லை. மற்ற கோழி குஞ்சுகளுடன் அதுவும் சேர்ந்து புழக்கடையில் விளையாடிக் கொண்டிருந்தது. ஒரு நாள் பெட்டைக் கோழி குஞ்சுகளை புழக்கடையை விட்டு வெளியே நடத்தி சென்ற போது, வாத்துக்குஞ்சுக்கு தண்ணீரின் மணம் தென்பட்டது. உடனே அது துரிதமாக தண்ணீரை நோக்கி ஓடியது. அதற்கு முன்பு அது குளத்தில் சென்றதேயில்லை. ஏன் அப்படி ஓடினது? அது தொடக்கத்திலேயே வாத்தாக இருந்தது. அது தன் சுயநினைவுக்கு வர வேண்டியிருந்தது. விசுவாசியும் அதே நிலையில் தான் இருக்கிறான். அவனுக்குள் ஏதோ ஒன்று உள்ளது. அவன் தேவனை முகமுகமாய் சந்திக்கும்போது, அவனுக்கு சுய நினைவு ஏற்படுகிறது. அவனுக்குள் இருக்கும் வித்து உயிர்ப்பிக்கப்படுகிறது. அது உண்மை. அவன் உலக காரியங்களினின்று பறந்து சென்று விடுகிறான், அவைகள் அவனுக்கு மரித்தவைகளாகிவிடுகின்றன. என்னே! நாமெல்லாரும் முற்காலத்தில் இவ்வுலக காரியங்களின்படி நடந்தோம் என்பது என் ஞாபகத்திற்கு வருகிறது. ஆனால் அந்த உண்மையான காரியத்தை நாம் பிடித்துக் கொண்டபோது! அது தான் நம்மை உயிர்ப்பித்தது. அந்த சிறு வித்து உயிர் பெற்றது. அப்பொழுது உலக காரியங்கள் அனைத்தும் அங்கேயே அழுகத் தொடங்கின. அவைகளின் மேல் நமக்கு விருப்பமே இல்லாமல் போயிற்று. 23“தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான் (1யோவான். 3:9), ஆராதனை செய்கிறவர்கள் ஒரு தரம் சுத்தமாக்கப்பட்ட பின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லை (எபி.10:2), பாவம் செய்ய வேண்டுமெனும் விருப்பம் அவர்களுக்கில்லை''. பாவத்தைக் குறித்த பிரச்சனை தீர்ந்துவிடுகிறது நீங்கள் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய ஒரு பாகமாகிவிடுகிறீர்கள். கிறிஸ்து உங்களை மீட்கவே மரித்தார். தேவன் இவ்வாறு செய்யவில்லையென்றால் நமது கதி என்னவாயிருக்கும் என்று சற்று யோசித்து பாருங்கள். ஆனால் தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மை மீட்டுக் கொண்டார். தேவனுடைய இரக்கத்தின் ஐசுவரியம் நம் மீது இல்லாமல் போயிருந்தால், இன்றிரவு நாம் எங்கு இருந்திருப்போம்? ஒரு காலத்தில் உலகம் பாவமான நிலையையடைந்து, பூமி சீர்கேட்டை அடைய மனிதன் காரணமாயிருந்தான். பூமியிலே “மனிதனை உண்டாக்கினதற்காக கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். தலை முழுவதுமே, உடல் முழுவதுமே, அழுகி நாற்றமெடுத்த புண்களைக் கொண்டதாயிருந்தது. மனிதனை உண்டாக்கினதற்காக கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்”. ''நான் சிருஷ்டித்த மனிதனை நிக்கிரகம் பண்ணுவேன். ஏனென்றால் அவன் அக்கிரமம் பூமியிலே பெருகினது'' என்றார் அவர். அச்சமயத்திலேயே மானிடவர்க்கம் முழுவதும் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன், குற்றமற்றவர்களை குற்றம் செய்தவர்களுடன் சேர்த்து அழிக்க பிரியப்படவில்லை. எனவே, நியாயம் செய்வதில் பிரியப்பட்டு உள்ளே வர விரும்பினவர்களுக்கு அவர் ஒரு வழியை வகுத்துக் கொடுத்தார். இரக்கத்தை விரும்பினவர்களுக்கு அவர் இரக்கத்தின் வழியை வகுத்துக் கொடுத்தார். அவர்களுக்காக அவர் ஒரு பேழையை ஆயத்தம் செய்தார். வேறு விதமாகக் கூறினால், கோழிக்குஞ்சுகளுடன் சேர்ந்து கழுகுக் குஞ்சுகளும் மூழ்கி விடாதபடிக்கு, கழுகுக் குஞ்சுகளுக்கு அவர் செட்டைகளைக் கொடுத்து நியாயத்தீர்ப்புக்கு மேல் பறந்து போகும்படி செய்தார். தப்பித்துக் கொள்வதற்கென நோவாவின் காலத்தில் அவர் ஒரு வழியை உண்டு பண்ணினார். ஏனெனில் அவர் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர். 24தப்பித்துக் கொள்வதற்கென அவர் ஒரு வழியை உண்டு பண்ணினாலும் ஜனங்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். அவ்வாறு அவர்கள் மறுக்கும் காரணம், அதை ஏற்றுக் கொள்ள அவர்களுக்குள் ஒன்றுமே இலலை, “சிகப்பு முள்ளங்கியிலிருந்து நீ இரத்தத்தைப் பெற முடியாது. ஏனெனில் அதில் இரத்தமே கிடையாது'' என்று என் தாயார் அடிக்கடி கூறுவதுண்டு. எனவே அதை ஏற்றுக்கொள்ள அவர்களுக்குள் எவ்வித ஜீவனும் இல்லாதிருக்கும் போது, அது ஏற்றுக் கொள்ளப்பட முடியாது. அதனால்தான் பரிசேயர் இயேசுவின் முகத்தை நோக்கி அவரை ”பெயல்செபூல்“ என்றழைத்தனர். ஏனெனில் அவரை ஏற்றுக் கொள்ள அவர்களுக்குள் ஒன்றுமேயில்லை. ஆனால், “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்” என்று அவர் கூறியுள்ளார் (யோவான். 6:37). எப்படியாகிலும் சத்தியம் அவர்களுக்கு அருளப்படும். 25சில சமயங்களில் தெருக்களில் செல்பவர்களுடன் நீங்கள் ஆண்டவரைக் குறித்து பேசலாம். அவர்கள் உங்களை பார்த்து கேலி செய்வார்கள். எவ்வாறாயினும், அதை நாம் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம். கவனியுங்கள், ''என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்'' (யோவான். 6:44), தேவன் முதலில் ஒருவனை இழக்க வேண்டும். அங்கு ஜீவன் இருக்க வேண்டும். “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்.'' மீட்கப்பட விரும்புகிறவர்களுக்கு அவர் ஒரு வழியை உண்டு பண்ணியிருக்கிறார். சுகம் பெற விரும்புகிறவர்களுக்கு அவர் ஒரு வழியை உண்டு பண்ணியிருக்கிறார். இவை யாவும் அவரை இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனாகச் செய்கிறது. அவர் எப்பொழுதுமே இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராயிருக்கிறார். இதை நீங்கள் ஏற்க மறுத்தால், உங்களுக்கு நியாயத்தீர்ப்பைத் தவிர வேறெதுவும் இல்லை. ஏனெனில் பாவமானது நியாயந்தீர்க்கப்பட வேண்டும். மோசேயும் அவனுடைய சேனையும் சிவந்த சமுத்திரத்திற்குள் செல்வதைக் கண்ட பார்வோன், மோசேயைப் பாவனை செய்து, அவனும் அவனுடைய சேனையும் சமுத்திரத்திற்குள் சென்றனர். இருவருமே சமுத்திரத்தில் அழிந்து போவார்கள் என்று தோன்றினது. ஆனால் தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய், எபிரேய பிள்ளைகள் தப்பித்துக் கொள்வதற்கு ஒரு வழியை உண்டு பண்ணினார். ஏன்? அவர்கள் தங்கள் பணியைச் செய்து, தேவனுடைய வார்த்தையைப் பின்பற்றினர். இரக்கத்தைப் பெற வேண்டுமானால் அதுதான் ஒரே வழி அதாவது தேவன் நமக்கு அளித்துள்ள கட்டளையைப் பின்பற்றுவதே. அவர் கூறினதை நாம் பின்பற்றும் போது தான், அவர் நம்மேல் இரக்கம் காண்பிக்க முடியும். 26சில நாட்களுக்கு முன்பு ஒரு போதகர் என்னுடன் விவாதம் செய்தார். இந்நாளில் நான் அப்போஸ்தலருடைய போதகங்களை போதிப்பதற்காக அவர் என் மேல் குற்றம் கண்டு பிடித்தார். அதைப் பற்றி, ஓரிரண்டு நாட்களுக்கு முன்பு நான் உங்களிடம் கூறினேன் என்று நினைக்கிறேன். அவர், “இக்காலத்தில் நீங்கள் அப்போஸ்தலருடைய போதகங்களை நுழைக்கப் பார்க்கிறீர்கள். அப்போஸ்தலர்களுடன் அப்போஸ்தலரின் காலம் முடிவு பெற்றுவிட்டது'' என்றார் அவர். நான், “நீங்கள் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கிறீர்களா?'' என்று கேட்டேன். அவர், “ஆம்” என்று பதிலளித்தார். “இதிலிருந்து ஒரு வார்த்தை எடுத்துப் போட்டால், அல்லது இதனுடன் ஒரு வார்த்தை கூட்டினால்” என்று வெளி. 22:18 உரைக்கிறதல்லவா? இரண்டு வார்த்தைகளல்ல, “ஒரு வார்த்தை” என்றேன் நான். அவர், “அதை நம்புகிறேன்'' என்றார். “அப்போஸ்தலரின் காலம் எப்பொழுது தொடங்கினது என்று என்னால் கூற முடியும். அப்போஸ்தல ஆசீர்வாதங்கள் சபைக்கு அளிக்கப்பட்டன. தேவனுடைய வார்த்தையை ஆதாரமாகக் கொண்டு, அதை எப்பொழுது தேவன் சபையிலிருந்து எடுத்துப் போட்டார் என்று கூறுங்கள் பார்க்கலாம். உங்களால் முடியாது. ஏனெனில் அது அவ்விதம் வேதத்தில் எழுதப்படவில்லை'' என்றேன். மேலும் தான், “பெந்தேகோஸ்தே நாளன்று பேதுரு, அவன் தான் அப்போஸ்தலருடைய காலத்தை தொடக்கி வைத்தவன், ”நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், 'நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது' என்று கூறியுள்ளதை நினைவு கூருங்கள்'' என்றேன். 27ஸ்தாபன பெட்டைக் கோழிகள் இடும் சத்தத்தைக் கேட்டு உலக காரியங்களில் ஜீவிக்க நீங்கள் விரும்பினால், ஏதோ உங்களில் தவறுள்ளது என்பதை அது காண்பிக்கிறது. வார்த்தை அப்படித்தான கூறுகிறது, ''விருப்பமுள்ளவன் வரக் கடவன்'' உனக்கு விருப்பமிருந்தால் நீ வர வேண்டும், உனக்கு வர மனமில்லையென்றால், நீ பரிதாபமான நிலையில் இருக்கிறாய், ஆனால் உனக்கு வர மனமிருந்தால், நீ வந்து தேவனுடைய சூத்திரத்தைப் பின்பற்று. அவர்தாம் வாக்குத்தத்தம் செய்துள்ளதை நிறைவேற்ற ஒரு போதும் தவறியதில்லை. நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன். அவர் தமது வார்த்தையை நிறைவேற்றத் தவறியதை நான் ஒருபோதும் கண்டதில்லை. ஏனெனில் தவறுவதைத் தவிர வேறு எல்லாவற்றையும் அவரால் செய்ய முடியும். அவர் தவறவேமாட்டார். அவர் தவறுவதென்பது கூடாத காரியம். அவர் தவறிவிட்டு தேவனாயிருக்க முடியாது. 28பார்வோனின் சேனைகள் பாவனை செய்ய முயன்றன. ஏனெனில் அவர்கள் அழைக்கப்படவில்லை, அவர்களுக்குள் ஜீவன் இல்லை. பார்வோனுக்கு வாக்குத்தத்தம் அளிக்கப்படவில்லை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அவன் சுதந்தரிப்பான் என்று அவனுக்கு வாக்களிக்கப்படவில்லை. அதுபோன்று, உண்மையான விசுவாசியை பாவனை செய்ய முயலும் போலியான எவனும் அதை ஒரு பரிகாசமாக்கிவிடுகிறான். இன்றைய மத சம்பந்தமான முறைமைகளிடையேயுள்ள தவறு அதுதான். அநேகர் இன்று பரிசுத்த ஆவியைப் பாவனை செய்ய முயல்கின்றனர். அநேகர் இன்று ஞானஸ்நானத்தை பாவனை செய்ய முயல்கின்றனர், அநேகர் அப்போஸ்தலரின் காலத்தைப் பாவனை செய்ய முயல்கின்றனர். இவையனைத்தும் விசுவாசிகளுக்கு மாத்திரமே. இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன், தமது பிள்ளைகள் அழிந்து போகக் கூடாதென்று எண்ணி, ஒரு வழியை உண்டு பண்ணியிருக்கிறார். அவர்களுக்காக ஒரு வழியை அவர் வகுத்துள்ளார். மோசேயைப் பின் தொடர்ந்த பார்வோன், மோசேயும் அவனுடைய குழுவையும் காப்பாற்றின அதே சமுத்திரத்தில் மூழ்கி மாண்டான். மோசே மூழ்கி மரிக்கவில்லை. ஏனெனில் இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன் அவர்களுக்கென வகுத்த வழியில் அவன் சென்று கொண்டிருந்தான். ஆமென் நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? தெய்வீக சுகமளித்தலில் விசுவாசமில்லாதவர்கள், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் விசுவாசமில்லாதவர்கள், எப்படி எதையாகிலும் பெற்றுக் கொள்ள முடியும்? அவரைப் பின்பற்றுபவர்க்கே தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராயிருக்கிறார் - ஒரு கோட்பாட்டை பின்பற்றுபவர்க்கு அல்ல, தேவனைப் பின்பற்றுபவர்க்கு. 29தேவன் வார்த்தையாயிருக்கிறார். வார்த்தை மாமிசமாகி, நம்மிடையே வாசம் பண்ணினார். தேவனுடைய மற்ற தன்மைகளை (attributes) வெளி கொணர்வதற்கென, நம்மிடையே வாசம் பண்ணினார். இயேசு தேவனுடைய சரீரமாயிருந்தார், ஒரு தன்மை (attribute). அவர் கடந்து போவதை மோசே கண்டான். அவருடைய பின்பாகத்தை அவன் கண்டான். அவருடைய முகத்தை அதற்கு முன்பு யாருமே கண்டதேயில்லை. ஆனால் இப்பொழுதோ அவரை நாம் கண்டிருக்கிறோம். அவரைப் பலியாகக் கண்டிருக்கிறோம். அவர் தேவனுடைய ஒரு தன்மையாக, வார்த்தையாக, வெளிப்பட்டார். அவர் வார்த்தையாக இருந்தார். விசுவாசி எவனும் தேவனிடத்தில் வரும்போது. அவன் தேவனுடைய வார்த்தையின் ஒரு தன்மையாக ஆகிவிடுகிறான். அந்நாளுக்கென வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள வார்த்தையை அவர் வெளிப்படுத்துகிறார், பாருங்கள்? அது உண்மை. இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன் சாட்சி எதுவுமின்றி நம்மைவிட்டதே கிடையாது. அவர் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர். 30தேவன் மோசேக்கு சிவந்த சமுத்திரத்தில் மிகவும் இரக்கமுள்ளவராய் இருந்தாரென்று நாம் பார்க்கிறோம். அவர் யாத். 19:4-ல், “நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின் மேல் சுமந்து உங்களை என்னண்டையிலே சேர்த்துக் கொண்டேன்'' என்றார். சிவந்த சமுத்திரத்தின் நடுவில் வேறு மனிதர்கள் இருந்தனர். அவர்கள் பாவனை செய்ய முயன்றனர். ஆனால் என்ன நேர்ந்தது? இஸ்ரவேலரை மாத்திரம் அவர் கழுகுகளுடைய செட்டைகளின் மேல் சுமந்து சென்றார். தேவன் எப்பொழுதுமே தமது தீர்க்கதரிசிகளை கழுகுகளுக்கு ஒப்பிடுகிறார். அது என்ன? மோசே அவருடைய தூதனாயிருந்தான். அவர்கள் மோசேயைப் பின்பற்றினர், அதுதான் அவர்களைச் சுமந்து சென்ற கழுகுகளின் செட்டைகள். ஏனெனில் அவன் தேவனுடைய செய்தியை அவர்களுக்கு அளித்துவந்தான். ஜனங்கள் அதை பின்பற்றினர். விடுதலையின் செய்தியை கொண்ட மோசேயை அவர்கள் பின்பற்றின போது, அவர்கள் உண்மையில் தேவனைப் பின்பற்றினர். வேதம், ''விசுவாசியாதவர்களுடன் அவர்கள் அழிந்து போகவில்லை'' என்று கூறுகிறது. தேவன் அவர்களுக்கு இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராயிருந்தார். ஏனெனில் அவர்கள் அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டனர். நாமும் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டுமென்று அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். 31கோராகும் தாத்தானும் அவர்களைச் சார்ந்த அவிசுவாசக் குழுவும் பாவனை செய்ய முயன்றனர். தேவனுடைய திட்டத்திற்குள் அவர்கள் ஏதோ ஒன்றை நுழைக்கப் பார்த்தனர். ஒரு மனிதனை உபயோகித்து தேவன் வகுக்கும் திட்டத்தை அவர்கள் விரும்பவில்லை. அவர்களும் ஏதாவதொன்றை செய்ய வேண்டுமென்று எண்ணினர் கோராகு, “மோசே, உன்னைக் காட்டிலும் அதிக பரிசுத்த மனிதர் இருக்கின்றனரே, கடற்கரையில் நீ மாத்திரம் ஒரே ஒரு கூழாங் கல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய். அப்படி நீ எண்ணக் கூடாது. உன்னைக் காட்டிலும் அதிக பரிசுத்தமுள்ளவர்கள் இங்குள்ளனர்'' என்றான். ஆனால் மோசேயோ அவன் தான் இஸ்ரவேல் புத்திரரை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வழிநடத்திச் செல்ல வேண்டுமென்பதை அறிந்திருந்தான். ஏனெனில் அவனுக்கு தான் அந்த வாக்குத்தத்தம் அளிக்கப்பட்டது. அவன் அவர்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வழி நடத்தி செல்லவேண்டும். 32இன்றைக்கும் தேவனுடைய வார்த்தையை உறுதிபடுத்த பரிசுத்த ஆவி இங்குள்ளது, நாம் சவாரி செய்ய நமக்கு அளிக்கப்பட்டுள்ள கழுகின் செட்டைகள் அதுதான் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட வேத தத்துவம் அல்ல. நாம் கழுகின் செட்டைகளின் மேல் சவாரி செய்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடைய வேண்டியவர்களாயிருக்கிறோம். கோராகு ஒரு கூட்டம் கோழிக் குஞ்சுகளைச் சேர்த்து கொண்டு கழுகை பாவனை செய்யலாமென்று நினைத்தான். அவன் அவ்வாறு செய்தபோது கர்த்தர், “அவர்களை விட்டு விலகிப் போ” என்று மோசேயிடம் கூறினார். அவர் அவர்களை விழுங்கிப் போட்டார். அவர் எல்லாவற்றையுமே முழு சிருஷ்டியையுமே அப்பொழுது விழுங்கியிருப்பார். ஆனால் அவருடைய வார்த்தையைப் பின்பற்ற முயல்பவர்க்கு தேவன் எப்பொழுதுமே இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராயிருக்கிறார் அநேகர் மோசேயின் பக்கம் அன்று சேர்ந்து கொண்டனர். தேவன் பூமியைப் பிளந்து அவிசுவாசிகளை விழுங்கிப் போட் டார். அவிசுவாசிகள் எப்பொழுதுமே அழிந்து போவர். 33விசுவாசியாத சிலர் சில காலம் நடந்தார்கள். ஆனால் இயேசுவோ, “அவர்கள் ஒவ்வொருவரும் மரித்தார்கள்'' என்றார். மரணம் என்பது முழு அழிவைக் குறிக்கிறது. அவர்கள் மரித்தார்கள். அவர்களை சற்று எண்ணிப் பாருங்கள். அவர்கள் எகிப்தை விட்டு வெளிவந்து, தேவனுடைய அற்புதங்களையும், அவருடைய பலத்த கரத்தையும் கண்டு, மன்னாவைப் புசித்து அனுபவித்து, இவை எல்லாவற்றிற்கும் பிறகு, தேவனுடைய வார்த்தைக்கு முரணானவைகளைப் போதித்து, தேவனுடைய வழியை தாறுமாறுக்கின பிலேயாம் என்னும் மனிதனுக்கு செவி கொடுத்தனர். அவன், ”நாமெல்லாரும் சகோதரர். எனவே நாமனைவரும் ஒன்று சேருவோம்“ என்றான். இன்று வேறொரு பிலேயாம் முறைமை எழும்பி, “நாமனைவரும் ஒன்று சேருவோம்'' என்கின்றது. ஆனால் அதனால் ஒன்றும் செய்ய முடியாது. நாம் யேகோவா கழுகுடன் நடந்து செல்வோம். நீங்கள் கழுகு குஞ்சுகள். அந்த கூட்டம் முழுவதிலும் மூன்று பேர் மாத்திரமே இரட்சிக்கப்பட்டனர், மோசே, காலேப், யோசுவா. மற்றவர் வனாந்தரத்தில் அழிந்து போயினர். அவ்வாறு இயேசு பரி. யோவான்: 6-ல் உரைத்துள்ளார். தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய், இவர்களும் மற்ற அவிசுவாசிகளுடன் அழிந்து போகவில்லை. அவர்கள் எல்லோரும் வனாந்தரத்தில் மாண்டுபோனார்கள். தேவன் மோசேயையும் கழுகு விசுவாசிகளையும் காப்பாற்றினார். ஏனெனில் அவருடைய வார்த்தையை அவர்கள் மதித்தனர். 34இன்றைக்கு நண்பனே, தேவனிடத்தில் நமக்கு தயவு கிடைக்கக் கூடிய ஒரே வழி; தேவன் இன்றைக்கும் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராயிருக்கிறார். ஆனால் நாம் அவர் கூறினவைகளை மதிக்க வேண்டும். மற்றவர்கள் கூறுவதை நீ எடுத்துக் கொள்ளக் கூடாது. தேவன் கூறினவைகளை மாத்திரமே நீ எடுத்துக் கொள்ள வேண்டும். அவர், “தேவனே சத்தியபரர், எந்த மனுஷனும் பொய்யன்'' என்று சொல்லியிருக்கிறார் (ரோமர்: 3:4). இன்றைக்கு இவ்விதமாக நம்மிடம் கூறப்படுகின்றது: “நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு சபையைச் சேர்ந்துகொண்டு, ஒரு கோட்பாட்டை பின்பற்றி, ஒரு ஜெபத்தை உச்சரித்து, உங்கள் பெயர் சபை புத்தகத்தில் எழுதப்பட்டு, நீங்கள் தெளிப்பு ஞானஸ்நானம் அல்லது ஒரு பிரத்தியேக முறையில் ஞானஸ்நானம் பெறுதலாகும், நீங்கள் செய்யவேண்டியது அவ்வளவு தான். ஆனால் அது தவறு. நீங்கள் தேவனுடைய கழுகாக இருக்கவேண்டுமானால், தினந்தோறும் தேவனுடைய வார்த்தையை பின்பற்ற வேண்டும். நீங்கள் தொடர்ச்சியாக அவருடைய வார்த்தையினால் போஷிக்கப்பட வேண்டும். 35தேவன் இஸ்ரவேலருக்கு இரக்கம் காட்டின பின்பு, அவர்கள் முறுமுறுத்து, விசுவாசத்தில் குன்றிப் போனார்கள் என்று பார்க்கிறோம். அவர்கள் தேவனுக்கு விரோதமாக முறுமுறுத்தபோது, பாம்புக் கடியினால் மரித்துப் போனார்கள். அவர்களுடைய கிரியைகளுக்குத் தக்க பலன் அவர்களுக்கு கிடைத்தது. நிச்சயமாக. தேவனுடைய வார்த்தைக்கு தவறிழைத்து, இத்தகைய செயல் புரிவோர், அதற்கேற்ற பலனை அடைந்து மரிக்கத்தான் வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரும் வனாந்தரத்தில் மரித்திருக்க வேண்டும். இவர்கள் அதிக வியாதிப்பட்டு, மருத்துவர் மோசேயும் மற்றோரும் ஒன்றுமே செய்ய முடியாமல் போயிற்று. அவர்கள் ஆயிரக்கணக்கில் மரித்துப் போயினர், ஆனால் தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய், அவரை விசுவாசிக்கிறவர்கள் அதனின்று தப்பித்துக் கொள்ள ஒரு வழியை உண்டு பண்ணினார். அவர் வெண்கல சர்ப்பம் ஒன்றை உயர்த்தி, பாம்பின் விஷத்திற்கு பரிகாரமாயிருக்கும்படி அதை செய்தார். தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய், தம்மை விசுவாசிக்கிற பிள்ளைகள் சுகம் பெறுவதற்காக ஒரு வழியை வகுத்து கொடுத்தார். தவறானவைகளைச் சரிபடுத்த, நீ எதிர்பார்க்கும் ஒவ்வொன்றையும் உனக்களிக்க தேவன் விருப்பங் கொண்டுள்ளார். உன் வாழ்க்கை பாதையில் நீ செல்லும் போது, உன் மேல் அவர் சிரத்தை கொண்டுள்ளார். ஏனெனில் நீ அவருடைய பிள்ளை. அவர் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர். உனக்கு நன்மை செய்ய அவர் விரும்புகிறார். 36பாவப் பரிகாரத்திற்காக தேவன் அமைத்துக் கொடுத்த அதே வெண்கல சர்ப்பத்தின் மூலம் ஜனங்கள் பிறகு பாவம் செய்தனர். வெண்கல சர்ப்பமானது, பாவம் ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்டுவிட்டது என்பதன் அறிகுறியாயிருந்தது. ஆனால் அவர்களோ தேவனுடைய அந்த ஈவை விக்கிரகமாக்கி பாவம் செய்தனர். “தேவன் தம்முடைய மகிமையை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளமாட்டார்''. எனவே நமக்கு இரண்டு, மூன்று அல்லது நான்கு தெய்வங்கள் இருக்க முடியாது. ஒரே தேவன் மாத்திரமே இருக்கிறார். அவர் தமது மகிமையை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளமாட்டார். அவர் ஒருவரே தேவன். ஆனால் அஞ்ஞானிகளுக்கோ அநேக தெய்வங்கள் உள்ளன. நமக்கோ ஒரு தேவன் மாத்திரமே உண்டு. அவர் தமது மகிமையை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளமாட்டார். அது மாத்திரமல்ல, அவருக்கு முன்பாக எதுவும் விக்கிரகமாக இருக்க அவர் அனுமதிக்க மாட்டார். ஜனங்களுடைய பாவத்திற்காக அவர் ஒரு பாவ நிவர்த்தியை ஏற்படுத்தினார். அது தேவனுடைய வார்த்தை, எனவே அது சரி. ஆனால் அவர்கள் அதை விக்கிரகமாக்கத் தொடங்கினபோது, அவர்களுக்குத் தொல்லைகள் ஏற்பட்டன. 37சபை காலங்களில் அது தான் சம்பவித்தது என்று எண்ணுகிறேன். தேவன் மார்டின் லூத்தரை அவருடைய செய்தியுடன் அனுப்பினார். தொடர்ந்து ஜான் வெஸ்லியையும் பெந்தேகோஸ்தே செய்தியையும் அவர் அனுப்பினார். ஆனால் அவர்களை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்தோம்? இஸ்ரவேல் ஜனங்கள் வெண்கல சர்ப்பத்தை வைத்துக் கொண்டு என்ன செய்தார்களோ அதையே. நாம் அவைகளை விக்கிரகமாக்கிக் கொண்டு, ''நான் இதை சார்ந்தவன், அதை சார்ந்தவன்'' என்கிறோம். உண்மையான தேவனுடைய வார்த்தையின் ஆராதனையுடன் சம்பந்தப்பட்ட உத்தமத்தை நாம் தவிர்த்துவிட்டு, ஏதோ ஒன்றுடன் நாம் சார்ந்திருக்கிறோம். என்ன நேர்ந்தது? தீர்க்கதரிசி அந்த விக்கிரகத்தை உடைத்துப் போட்டான் என்று வேதம் கூறுகின்றது. அல்லேலூயா! இன்றைக்கும் ஸ்தாபனங்களாகிய விக்கிரகத்தை உடைத்து போடக் கூடிய ஒரு தீர்க்கதரிசி நமக்கு அவசியமாயுள்ளது. தங்கள் கோட்பாடுகளைக் கொண்டும், ஸ்தாபனங்களைக் கொண்டும் பரலோகத்திற்குப் போய்விடுவதாக எண்ணிக் கொண்டிருக்கும் இந்த ஸ்தாபனங்கள் அழிக்கப்பட்டு, சுட்டெரிக்கப்பட்டு, தூர எறியப்பட வேண்டும். தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராயிருக்கிறார். நாம் அந்தகாரத்தின் குழப்பத்தில் இருந்திருக்க வேண்டிய இந்நாட்களில், இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன் தமது உண்மையான பரிசுத்த ஆவியை அனுப்பி நம்மை அதனின்று மீட்டுக் கொண்டு, ஒவ்வொரு இரவும் இக்கட்டிடத்தில் தமது சொந்த வியாக்கியானத்தையளித்து அதை உறுதிபடுத்தி வருகிறார். இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன் அவரை எவ்வளவு அற்புதமானவராக நாம் அறிந்து கொண்டிருக்கிறோம்! ஆம், ஐயா. தேவன் மோசேயைக் கொண்டு உண்டாக்கி கம்பத்தில் உயர்த்தின அந்த வெண்கல சர்ப்பத்தின் முன்னால் உத்தமமில்லாமல் நின்றாலும் அவர்கள் சுகமடைந்துவிடலாம் என்று எண்ணியிருந்தனர். அவர்கள் அங்கு நின்று கொண்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தனர். இப்படியே வழக்கமாக செய்து அதை விக்கிரகமாக்கிக் கொண்டபோது, தேவன் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பி அதை அழித்துப்போட்டார். 38வனாந்தரத்தில் அந்த வெண்கல சர்ப்பத்தை நோக்கி பார்க்க மறுத்தவர் அனைவரும் அழிந்து போயினர். தேவன் ஒரு வழியை உண்டு பண்ணி, அதை நீ ஏற்க மறுத்து, தெருவில் உட்கார்ந்து கொண்டும், ஏதோ கோட்பாடுகளை இறுகப் பற்றிக் கொண்டும், தேவனுடைய வார்த்தையை நேராக நோக்கி அது சரியா இல்லையா என்று கண்டு கொள்ள மறுத்தால் - அதை நோக்கிப் பார்க்க மறுத்தவர் அனைவருமே அழிந்து போயினர். தேவன் ஒரு போதும் மாறாதவர். அதை நோக்கிப் பார்க்க மறுத்தவர் அழிந்து போயினர். இன்றும் அவ்விதமாகவே உள்ளது. ஜனங்கள் பிறகு பாவம் செய்து, எப்பொழுதும் போல அதனின்று ஒரு விக்கிரகத்தையுண்டாக்கி, உத்தம மனப்பான்மையில்லாமலேயே சுகத்தைப் பெற முயன்றனர். இன்று நாம் செய்வது போல், அவர்களும் ஏதோ ஒன்றை சார்ந்திருந்தனர். ஆனால் வித்தியாசம் என்னவெனில் தேவன்... அது அந்த காலத்திற்கு ஒரு நல்ல பாவ பரிகாரமாகவும், நல்ல அடையாளமாகவும் அமைந்திருந்தது. அந்த காலத்திற்கு அது சரியே. ஆனால் அது அந்த காலத்திற்கு மாத்திரம், அந்த பிரயாணத்தின் போது மாத்திரம் இருந்திருக்க வேண்டும். அந்த பிரயாணத்தின் போது மாத்திரமே அது கிரியை செய்யும். 39அதுபோன்று, மார்டின் லூத்தர் கொண்டு வந்த 'நீதிமானாக்கப்படுதல்' என்னும் செய்தி லூத்தரின் காலத்திற்கு உகந்தது. அது அதுவரைக்கும் தான். வெஸ்லியின் காலத்தில் 'பரிசுத்தமாக்கப்படுதல்' என்னும் செய்தி நல்லது. அது அந்த காலம் வரைக்குமே. பின்பு நாம் பெந்தேகோஸ்தே காலத்திற்கு வருகிறோம். வரங்கள் புதுப்பிக்கப்படுதல் என்பது மிகவும் நல்லது தான். அது அந்த காலத்திற்கு மிகவும் சிறந்ததாக அமைந்திருந்தது. ஆனால் நாம் அதை கடந்து வந்துவிட்டோம். உலகம் இருப்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக நாம் அதை கடந்து வர வேண்டியவர்களாயிருக்கிறோம். ஏனெனில் முன்காலத்தவரைப் போல் நாமும் இதிலிருந்து ஒரு விக்கிரகத்தை உண்டாக்கிக் கொண்டு, ''நான் இந்த ஒழுங்கை சேர்ந்தவன்“, “அந்த ஒழுங்கைச் சேர்ந்தவன்'' என்று கூறிக் கொள்கிறோம். அதை தூள் தூளாக உடைத்து, சுக்கு நூறாக கிழித்தெறிந்து, தமது முழு வார்த்தையையும் உறுதிபடுத்த தேவன் யாரையாகிலும் ஒருவரை அனுப்புவார். கவனியுங்கள். தேவனுக்கு துதியுண்டாவதாக, அது உண்மையென்று நாம் காண்கிறோம். தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர்! 40தீர்க்கதரிசி இதை நிர்மூலமாக்கினபோது, சுகம் பெறுவதற்கு அல்லது பாவ நிவாரணத்திற்கு அவர்களுக்கு எந்தவித அடையாளமும் இல்லாமல் போனது. ஏனெனில் அவர்களுடைய விக்கிரகம் நொறுக்கப்பட்டது. ஆனால் தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் வேறொன்றை அளித்தார். அவர் என்ன செய்தார்? தேவாலயத்திலிருந்த குளத்தின் தண்ணீரை அவர் கலக்கினார். அநேகர் அந்த தண்ணீருக்குள் பிரவேசித்து சுகமடைந்தனர். இயேசு அந்த குளத்தினருகில் வந்து, தண்ணீர் கலக்கப்படும்போது அதனுள் இறங்குவதற்காக அநேக ஆண்டுகளாக காத்திருந்த ஒரு மனிதன் அங்கு படுத்துக் கொண்டிருப்பதைக் கண்டார். இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனைப் பாருங்கள்! அவர்கள் அதை விக்கிரகமாக்கி, தீர்க்கதரிசி அதை உடைத்துப் போட்ட போதிலும், தேவன் வேறொரு வழியை அவர்களுக்கு வகுத்துக் கொடுத்தார். ஏனெனில் அவர் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர். அவர்கள் சுகம் பெற வேண்டுமென்று விரும்பி அதற்கான ஒரு வழியை உண்டாக்கித் தந்தார். இது இப்படியே போய் கொண்டிருந்தது. நாட்கள் செல்ல செல்ல உலகமும் பாவத்தை அதிகமாக செய்து கொண்டு வந்தது. முடிவில் அது மிகுந்த பாவம் செய்யும் நிலையையடைந்தபடியால், தேவன் அதை அழித்திருக்கலாம். ஆனால் அவரோ மல்கியா. 4-ல், “நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு...'' என்கிறார் (மல். 4:6). 41தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் ஒரு இரட்சகரை, இயேசு கிறிஸ்துவை, அனுப்பினார். அவர் இயேசு கிறிஸ்துவை இரட்சகராகவும் நோய்களை குணமாக்கும் பரிகாரியாகவும் அனுப்பினார். அவர், ''சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல, மனுஷ குமாரனும் உயர்த்தப்பட வேண்டும்'' என்றார் (யோவான். 3: 14-15) - அதே நோக்கத்திற்காக. அவர் தம்மை பாவ நிவாரணமாகத் தந்தார். அதை தான் நாம் உரிமை கோருகிறோம். இயேசு தமது இரத்தத்தினால் சம்பாதித்தவைகளின் பேரில் நமக்கு உரிமையுண்டு. ''நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் (குணமானோம்)'' என்று வேதம் கூறுகின்றது (ஏசா. 53:5). அதன் மேல் தான் நாம் உரிமை கோருகிறோம். அந்த பாவ நிவாரணபலி நமக்காக செலுத்தப்பட்டது. தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர். அது நித்திய பாவ நிவாரணம். ஏனெனில் தேவனோ பாவமான மாமிச சரீரத்தில் தோன்றி, மாமிசத்தில் வேதனை பட்டு, தம்மை நித்திய பாவ நிவாரண பலியாகச் செலுத்தி, அந்த பாவ நிவாரணத்தை உறுதிபடுத்த பரிசுத்த ஆவியின் ரூபத்தில் திரும்ப வந்திருக்கிறார். வெண்கல சர்ப்பமோ, கலக்கப்பட்டோ தண்ணீரோ, அதை செய்ய முடியவில்லை ஆனால் அவையாவும் அந்த பரிபூரண பாவ நிவாரண பலியைச் சுட்டிக் காண்பித்தன. தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் இதை நமக்குச் செய்தார். 42நாம் சபையின் காலங்கள் அனைத்தையும் கடந்து இந்நாட்களுக்கு வந்துள்ளோம். நம் நாட்களிலுள்ள வேதபண்டிதர்கள் இந்நாட்களின் முக்கியத்தைக் காணத் தவறிவிட்டனர். இவையாவும் வேறொரு காலத்துக்குரியது என்று அவர்கள் விளக்கம் தெரிவித்து, அதை அசட்டை செய்துவிடுகின்றனர். அது போன்றே அவர்கள் தெய்வீக சுகமளித்தலைக் குறித்தும் கூறுகின்றனர். யாருக்கும் அதன் பேரில் நம்பிக்கை இருப்பதாக தெரியவில்லை. அவர்கள் அதை ஏளனம் செய்கின்றனர், கடந்த இருபது ஆண்டு காலமாக அவர்கள் இவ்வாறு கேலி செய்து வருகின்றனர். பெந்தேகோஸ்தேயினருக்கு தொடக்கத்தில் அதன் பேரில் நம்பிக்கை இருந்து வந்தது. இப்பொழுதோ அவர்கள் அதைவிட்டு அகன்று சென்றுவிட்டனர். அவர்கள் எப்படி அகன்று சென்றனர் என்று பாருங்கள். அவர்களுக்கு ஸ்தாபனப் பைத்தியம் பிடித்துவிட்டு, அவர்கள் வெவ்வேறாகப் பிரிந்து, ஒவ்வொருவரும் தனித்தனியே கோட்பாடுகளை உண்டாக்கிக் கொண்டனர். வெளிச்சம் தோன்றினபோது, அதை ஏற்றுக் கொள்ளுவதற்குப் பதிலாக, அவர்கள் தனித்தனியே கோட்பாடுகளையும் போதகங்களையும் உண்டாக்கிக் கொண்டு அதில் நிலைத்திருக்கின்றனர். அவர்கள் இவ்விதம் அகன்று சென்ற காரணத்தால் பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய சபைகளுக்குள் பிரவேசிக்க முடியவில்லை. வெண்கல சர்ப்பத்தைப் போல் அவர்கள் மற்றொரு விக்கிரகமாயினர், அது விக்கிரகாராதனையில் முடிந்தது. ஒவ்வொருவனும், “நான் இதை சார்ந்திருக்கிறேன். அதை சார்ந்துவிட்டேன்'' என்று சொல்லத் தொடங்கிவிட்டான், அது விக்கிரகாராதனை. கடைசி காலத்தில் நாம் எத்தகைய குழப்பத்தில் இருக்கிறோம் பாருங்கள். ஆனால் தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய், பரிசுத்த ஆவியை நம் மேல் அனுப்பி, அவர் வாக்களித்தபடியே இன்றிரவு அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்தி வருகிறார். இவைகளைச் செய்வதாக தேவன் வாக்களித்தார். அவர் என்ன செய்தாரென்று பாருங்கள்! 43ஒவ்வொரு காலத்திலும் என்னனென்ன நிகழும் என்று அவர் வாக்களித்திருந்தாரோ, அவர் கூறியபடியே அது நிறைவேறினது. ஏனெனில் அவர் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர். அவர் வாக்குத்தத்தம் செய்துள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நிறைவேற்றுவதற்கு அவர் எப்பொழுதும் இரக்கமுள்ளவராயிருக்கிறார். அவர் தேவனாயிருக்க வேண்டுமானால் அவர் அப்படித்தான் செய்ய வேண்டும். அவருடைய வார்த்தை அதனதன் காலத்தில் நிறைவேறும், அவர் பூமியில் விதைத்த விதை. அவர் என்ன செய்தார்? அவர் வார்த்தையை இங்கு புதைத்தார். அதுதான் விதை. ஒவ்வொரு காலத்தின் போதும் அந்த விதை முதிர்ந்து, சீர்திருத்த காலம் தோன்றுகிறது. அவர் அவ்வாறு வாக்களித்தார். எனவே அது நிறைவேறுகின்றது. இதற்கெல்லாம் நாம் தகுதியுள்ளவர்கள் அல்ல. தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற நாம் அபாத்திரர். ஏனெனில் நாம் உலக காரியங்களைப் பின்பற்றி, காயீனுடைய தவறைச் செய்தோம். காயீன் ஒரு அழகான பலிபீடத்தையும் ஒரு அழகான ஆலயத்தையும் கட்டினான். அந்த பலிபீடத்தின் மேல் அவன் பூக்களை வைத்தான். அதுதான் சரியென்று அவன் நினைத்தான். ஏதேன் தோட்டத்தில் அவன் பெற்றோர் ஆப்பிள் பழம், பேரிக்காய் அல்லது மாதுளம் பழத்தை தின்றதனால் தான் விரட்டியடிக்கப்பட்டனர் என்று அவன் எண்ணி, அதை தேவனுக்கு பலியாக செலுத்தினான். தேவனோ அதை புறக்கணித்தார். 44ஆனால் ''விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்.'' (எபி. 11:4). வேதாகமம், “இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, கோரா எதிர்த்துப் பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப் போனார்கள்'' என்று கூறுகிறது (யூதா. 11). பலிபீடங்களைக் கட்டுதல், ஆலயங்களைக் கட்டுதல், ஸ்தாபனங்களை உண்டாக்கிக் கொள்ளுதல், அதை அலங்காரப்படுத்துதல், மற்றவர்களை விட அதிக அங்கத்தினர்களை சேகரித்தல், எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு மேலும் கீழும் குதித்து அல்லது கைகுலுக்கி, ஒரு பிரத்தியேக முறையில் ஞானஸ்நானம் கொடுத்து, அந்நிய பாஷை பேசி, அங்கத்தினர்களின் பெயர்களை புத்தகத்தில் எழுதி, இவையனைத்தும் செய்து, அதே சமயத்தில் உண்மையான சத்தியத்தை புறக்கணித்து அதை மறுதலித்தல், அது எப்படி முடியும்? நாம் எப்படிப்பட்ட குழப்பத்தில் இருக்கிறோம் என்பதைக் கவனியுங்கள். ”இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, கோரா எதிர்த்துப் பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்'' என்று வேதம் கூறுகின்றது. (ஆங்கில வேதத்தில் “Perished'', ”அழிந்து போனார்கள்“ என்று எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்). கோரா எதிர்த்துப் பேசின பாவத்திற்குள்ளாகி அழிந்து போனார்கள். கோரா என்ன எதிர்த்துப் பேசினான்? ”நீ ஒருவன் மாத்திரம் பரிசுத்த மனிதன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாயா?... நாங்கள் எல்லோருமே பரிசுத்தர். முழு சபையுமே பரித்தமுள்ளது... நாமெல்லாரும் ஒன்று சேர வேண்டும். அதை தான் நாம் செய்யவேண்டும்.'' அப்படி செய்ததனால் தான் அவர்கள் அழிந்து போனார்கள். நாமும் அழிந்துபோக வேண்டியவர்களாயிருந்தோம். ஆனால் தேவனோ, இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய், அந்த குழப்பத்தினின்று நம்மை வெளியே கொணர்ந்து, அதற்கு அழிவு உண்டாகும் முன்பே அதை காணும்படி கிருபை செய்தார். அவர் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய், தெய்வீக சுகமளித்தலின் எழுப்புதலை நமக்கு அனுப்பினார். தேவனுடைய வல்லமை மறுபடியும் நம்மிடையே வந்தது. எந்த ஒரு எழுப்புதலும் மூன்று ஆண்டு காலத்திற்கு மேல் நீடித்ததில்லை என்று வரலாறு நமக்கு கூறுகின்றது. ஆனால் இந்த எழுப்புதலோ பதினைந்து ஆண்டு காலமாய் இருந்து வந்து, உலகம் சுற்றிலும் எழுப்புதல் அக்கினி பற்றியெறிந்து வருகிறது. அதற்கு நாம் தகுதியுள்ளவர்கள் என்னும் காரணத்தினாலா? நாம் தகுதியுள்ளவர்கள் என்பதற்காக அல்ல, அவருடைய கிருபையின் ஐசுவரியத்தினால். அது என்ன செய்துள்ளது என்று சற்று யோசித்து பாருங்கள். 45இங்கு பீனிக்ஸிலுள்ள ஒரு சகோதரியின் ஞாபகம் எனக்கு வருகிறது. உங்களில் அநேகருக்கு அவளைத் தெரியும், சகோதரி ஹாட்டி வால்ட்ராப். அவளுக்கு இருதய புற்று நோய் இருந்தது. பதினைந்து அல்லது பதினெட்டு ஆண்டுகட்கு முன்பு நானும் சகோ . மூரும் முதன் முறையாக இங்கு வந்திருந்தபோது, அவள் ஜெபவரிசையில் இருந்தாள். இருதய புற்று நோய் காரணமாக அவள் மரித்துக் கொண்டிருந்தாள். அநேக ஆண்டுகளுக்கு முன்பே அவள் மரித்திருக்க வேண்டும். ஆனால் தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் அவருடைய வல்லமையை அவள் மேல்அனுப்பி, அவளைக் காத்தார். அவள் இன்றைக்கும் உயிரோடிருக்கிறாள். தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர். காங்கிரஸ்காரர் உப்ஷா மிகவும் பெரியவர். அவர் தென் பாப்டிஸ்டு கன்வென்ஷனுக்கு ஒருமுறை தலைவராகவோ உபதலைவராகவோ பணியாற்றியிருக்கிறார். அவரால் இயன்றது அனைத்தையும் அவர் செய்தார். அவர் மிகவும் நல்லவர். அவர் எல்லா மருத்துவர்களையும் அணுகினார். எவருமே அவரை குணமாக்க முடியவில்லை. அவர் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே இருந்தார். அநேக போதகர்கள் அவருக்காக ஜெபம் செய்தனர். காலன் கணக்கில் எண்ணெய் அவர் தலையின் மேல் ஊற்றப்பட்டு, வெவ்வேறு போதகர்கள் அவருக்கு ஜெபம் செய்திருக்கின்றனர். ஆனால் யாதொரு பயனுமில்லை. 46ஒரு இரவு, கலிபோர்னியாவிலுள்ள லாஸ் ஆஞ்சலிஸில் நான் பிரசங்க பீடத்தின் மேல் ஏறினபோது, அங்கு அநேக சக்கர நாற்காலிகளைக் கண்டேன். இங்குள்ளதைக் காட்டிலும் இரண்டு, மூன்று மடங்கு அதிகம் இருந்திருக்கும். அங்கு ஒரு கட்டிலின் மேல் ஒரு நீக்ரோ சிறுமி படுத்திருந்தாள். அவள் அருகில் அவள் தாயார் அமர்ந்திருந்தார். என் போதகர் சகோதரன் அப்பொழுது ஜெப வரிசையை உண்டாக்கிக் கொண்டிருந்தார். என்ன நடக்கிறதென்று அறியாமல் நான் பார்த்துக் கொண்டிருந்த போது, ஒரு தரிசனம் கண்டேன். அந்த தரிசனத்தில் ஒரு நீக்ரோ சிறுமிக்கு தொண்டை கோளாறுக்காக அறுவை சிகிச்சை செய்வதை கண்டேன். அதன் விளைவாக அவளுக்கு திமிர்வாதம் (Paralysis) ஏற்பட்டு அவளால் நடக்க முடியாமற் போயிற்று. நான் சுற்று முற்றும் பார்த்து, அந்த பெண் எங்கே என்று தேடினேன். அவளைக் காண முடியவில்லை . சிறிதுநேரம் கழித்து, சற்று தூரத்தில், ஏழு அல்லது எட்டு வயதான அந்த அழகான சிறுமி, வாழ்நாள் முழுவதும் நடக்க முடியாத நிலையையடைந்து அங்கு படுத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அவளருகில் அவள் தாயார் முழுங்காற்படியிட்டு ஜெபம் செய்து கொண்டிருந்தாள். நான் அவளிடம், “ஒரு மருத்துவர் அவளுக்கு அறுவை கிகிக்சை செய்தார்'' என்று கூறி அதை முழுவதும் விவரித்தேன். அவள், “அது உண்மை, ஐயா” என்றாள். அவள் குழந்தையை மேடைக்குக் கொண்டுவர முயன்றாள். அங்கிருந்தவர்கள் அவ்வாறு செய்ய வேண்டாமென்று அவளுக்கு ஆலோசனை கூறி அவளை அமைதிப்படுத்த முயன்றனர். அவள் அமைதியானபிறகு நான், “அவளுக்காக ஜெபம் செய்யலாமே'' என்று யோசித்தேன். சில நிமிடங்களில்... இங்கிருப்பவர்களில் சிலர் ஒருக்கால் அன்றிரவு அங்கு இருந்திருக்கலாம். நான் கூட்டத்தை நோக்கிக் கொண்டிருந்த போது, தரிசனத்தில் அந்த சிறுமி ஒரு குறுகிய தெருவின் வழியாய், கையில் ஒரு பொம்மையைப் பிடித்துக் கொண்டு, அதை தூங்க வைப்பதற்காக ஆட்டிக் கொண்டு, நடந்து செல்வதைக் கண்டேன். அவள் வாழ்நாள் பூராவும் திமிர்வாதத்தினால் அவதியுற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருந்த போதிலும், தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய். பரிசுத்த ஆவியை அனுப்பி அவளைச் சுகப்படுத்தினார். அதை எனக்கு தரிசனத்திலும் காண்பித்தார். அந்த சிறுமி படுக்கையை விட்டு எழுந்து, தன் தாயின் கரங்களைப் பிடித்துக் கொண்டு, தேவனை துதித்துக் கொண்டே நடந்து சென்றாள். 47அங்கு பின்பாகத்தில் ஒரு வயோதிபர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார், அவர் தான் காங்கிரஸ்காரர் உப்ஷா. அவருடைய சாட்சியை உங்களில் அநேகர் அறிவீர்கள். அவர் மிகவும் நல்லவர். அவர் சுகமடைய தம் வாழ்நாள் பூராவும் முயற்சிச் செய்தார். அறுபத்தாறு ஆண்டுகளாக ஊனமுற்றவராக அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார், அவரை யாராவது தூக்கி படுக்கையில் கிடத்த வேண்டும். கக்க தண்டங்களை உபயோகித்தே அவரால் நடக்க முடியும். மற்றவர்களைப் போல் அவரால் சாதாரணமாக நடக்க முடியாது. இச்சிறுமி சுகமடைந்ததை அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென்று நான் தரிசனம் ஒன்று கண்டேன். அதில் இவர், தலையை வணங்கினவாறு, கூட்டத்தின் மத்தியில் மற்றவர்களைப் போலவே நன்றாக நடந்து வருவதைக் கண்டேன். அந்த மனிதன் யாரென்று அப்பொழுது எனக்கு தெரியாது. நான், “கீர்த்தி வாய்ந்த ஒருவர் பின்பாகத்தில் அமர்ந்திருக்கிறார். அவர் சிறுவனாயிருந்த போது, வண்டியிலிருந்து வைக்கோல் தூக்கிச் செல்லும் இரும்புச் சட்டத்தின் மேல் விழுந்து முதுகெலும்பை காயப்படுத்திக் கொண்டார். ஜனங்கள் நடக்கும்போது ஏற்படும் அசைவினால் (Vibrations) அவருடைய முதுகு பாதிக்கப்படாமலிருக்க, அவர்கள் தரையில் துளைகளை உண்டாக்கினர். அவர் மிகவும் பெரியவர். அவர் மென்மேலும் பெரியவராகிக் கொண்டே போகிறார். இப்பொழுது அவர் ஜனாதிபதியின் வீட்டில் கூடும் அந்த மகத்தான குழுவின் அங்கத்தினராயிருக்கிறார்'' என்றேன். அப்பொழுது அங்கிருந்த மனிதன் என்னிடம், “அவர் தான் காங்கிரஸ்காரர் உப்ஷா. அவரைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்று கேட்டார். நான், ''கேள்விப்பட்டதில்லை'' என்றேன். எனவே அவர் ஒலி பெருக்கியை சற்று நீட்டிக் கொடுத்தார். அவர்கள் இங்கும் அங்குமாக பேசிக் கொண்டிருந்தனர். 48நான் சுற்றிலும் பார்த்தபோது, அந்த வயோதிப காங்கிரஸ்காரர் எழுந்து என்னை நோக்கி, மற்றவர்களைப் போல் சாதாரணமாக நடந்து வருவதை நான் தரிசனத்தில் கண்டேன். தேவன் இரக்கத்தில் ஐசுவர்யமுள்ளவராய் அவரை சக்கர நாற்காலியிருந்து வெளியே இழுத்து நடக்கச் செய்தார். அவர் மரிக்கும் நாள் வரை கக்க தண்டங்களின் உதவியின்றி சாதாரணமாக நடந்தார். இரக்கத்தில் ஐசுவர்யமுள்ள தேவன் மருத்துவர்கள் தோல்வி கண்டபோது, விஞ்ஞானம் தோல்வி கண்ட போது, எல்லாமே தோல்வியுற்ற போது, தேவன் காங்கிரஸ்காரர் உப்ஷாவுக்கு இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராயிருந்தார். என்னைக் குறித்து இப்பொழுது நான் எண்ணிப் பார்க்கிறேன். நான் சிறுவனாயிருந்த போது... “ஜனங்கள் என்னை பெண்களை வெறுப்பவன்'' என்றழைக்கின்றனர், அதற்கு காரணம், நான் சிறுவனாயிருந்த போது, பெண்களின் ஒழுக்கங்கெட்ட நடத்தையை அதிகமாய் கண்டிருக்கிறேன். அவர்களை நான் வெறுத்த துண்டு. ஆனால் இப்பொழுது இல்லை. ஏனெனில் அவர்களில் நல்லவர்கள் இருக்கின்றனர் என்று அறிவேன். ஆனால் அது எவ்வளவு மோசமாயிருந்தது, ஒழுக்கங்கெட்ட விதமாயிருந்தது என்பதை நினைவு கூருகிறேன். ”நான் ஜனங்கள் இருக்கும் இடத்தில் நான் இருக்கப் போவதில்லை, எனக்கு படிப்பும் கிடையாது. இனி நான் படிக்கவும் போவதில்லை'' என்று எண்ணினேன். 49நான் சிறுவனாக இருந்தபோது, எனக்கு போட்டுக் கொள்ள ஒரு 'ஷர்ட்'டும் கூட கிடையாது, ஒரு 'கோட்' டை மாத்திரம் போட்டுக் கொண்டு, அதை பாதுகாப்பு ஊசியால் (safety pin) இப்படி குத்திக் கொள்வேன். எனக்கு மிகவும் உஷ்ணமாயிருக்கும். உபாத்தியாயினி, “வில்லியம், 'கோட்'டைப் போட்டுக் கொண்டிருக்கிறாயே! உஷ்ணமாக இல்லையா?'' என்று கேட்டார்கள். நான், “இல்லை, அம்மணி, எனக்கு குளிராயிருக்கிறது'' என்று கூறிவிட்டேன். உடனே அவர்கள் என்னை நெருப்பினருகில் அனுப்பிவிட்டார்கள். எனக்கு வெந்து போனது. அந்த காலம் முழுவதும் போட்டுக் கொள்ள 'ஷர்ட்'டே எனக்கில்லை. ”எனக்கு சிறிது பணம் கிடைத்தால் நான் முப்பது முப்பது துப்பாக்கி ஒன்றை வாங்கிக் கொண்டு, மேற்கு பாகம் சென்று, என் வாழ் நாள் முழுவதும் வேட்டையாடி செலவழிப்பேன். ஜனங்களுடன் எவ்வித தொடர்பும் கொள்ள எனக்கு விருப்பமில்லை, ஏனெனில் அவர்களுக்கு என் மீது பிரியமில்லை. எனவே அவர்களை விட்டு தூரம் சென்று விடுவேன்'' என்று எண்ணினேன், நான் பட்டினத்திற்கு செல்லும் போது தெரிந்த யாரையாவது சந்திக்க நேர்ந்தால், “ஹல்லோ, ஜான், ஜிம் எப்படியிருக்கிறீர்கள்?'' என்று கேட்பேன். அவர்கள், ''ஹல்லோ'' என்று மாத்திரம் கூறுவார்களே தவிர அதற்கு மேல் பேச மாட்டார்கள். பாருங்கள், அவர்களுக்கு என்னுடன் பேச பிரியமில்லை. என்னுடன் எவ்வித தொடர்பும் கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை - என் தகப்பனார் சாராயம் காய்ச்சினார் என்ற காரணத்தால். நான் அப்படி செய்யவில்லையே! நான் அப்படி செய்யவும் மாட்டேன். ஆனால் இப்பொழுதோ... 50அண்மையில் என் மனைவியிடம் நான், “நமது சுவர்களில் மிகவும் சிறந்த துப்பாக்கிகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன” என்றேன். நான் அணிந்திருந்த அழுக்கு துணிகளை நினைவு கூருகிறேன். இப்பொழுதோ இரண்டு, மூன்று சிறந்த 'சூட்'டுகள் எனக்குள்ளன. எனக்கு நண்பர்கள் உள்ளனரா? ஜனங்களிடமிருந்து ஓடி வனாந்தரத்தில் மறைந்து கொள்ள வேண்டிய அளவுக்கு அவ்வளவு நண்பர்கள் இருக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் என்ன? என் தேக அமைப்பா? என் படிப்பா? இல்லவே இல்லை, தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் என்னை அந்நிலையில் கண்டு, என்னை இரட்சித்தார். நான் குருடனாக, கைலாகு கொடுத்து நடத்தப்பட்டதை நினைவு கூருகிறேன். என்னால் பார்க்க முடியவில்லை. எனக்கு முன்னால் இருந்ததெல்லாம் மங்கலாக காட்சியளித்தன. என் வாழ்நாள் பூராவும் நான் குருடனாயிருந்திருக்க வேண்டும். ஆனால் தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய், என் பார்வையை எனக்கு மீண்டும் அளித்தார். எனக்கு ஐம்பத்தைந்து வயதாகின்றது, இப்பொழுதும் என் பார்வை நன்றாயுள்ளது. தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர் என்று மாத்திரமே என்னால் கூறமுடியும். 51சபைக்கு தெய்வீக சுகமளித்தலுக்கு வழி அளிக்கப்படாமலிருந்தது. முன்பு அவர்களுக்கு அளிக்கப்பட்ட போது, அவர்கள் அதை புறக்கணித்தனர். ஆனால் தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் தெய்வீக சுகமளித்தலின் வரத்தை அனுப்பித் தந்தார். அது தான் நம்மிடையேயுள்ள பரிசுத்த ஆவி. அது வார்த்தையை உறுதிபடுத்தி, அடையாளங்களை நடப்பிக்கிறது. தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர், நான் இரண்டு, மூன்று பக்கங்கள் இங்கு குறிப்பு எழுதி வைத்துள்ளேன். ஆனால் அவைகளை நான் பேசப் போவதில்லை. ஏனெனில் ஜெப வரிசையை ஆரம்பிக்க நேரமாகிவிட்டது என்று உணருகிறேன். தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர்! இன்றிரவு இங்குள்ள உங்களில் அநேகர் மருத்துவர்களால் கைவிடப்பட்டிருக்கலாம். இங்கு ஜனங்கள் சக்கர நாற்காலிகள் அமர்ந்துள்ளனர். அவர்கள் ஒருக்கால் அதை விட்டு எழுந்து வர முடியாமலிருக்கலாம். அவர்கள் வெவ்வேறு வழிகளில் ஊனமுற்று அங்கு அமர்ந்துள்ளனர். அங்கிருந்து எழுந்து நடக்க அவர்களுக்கு வழியேயில்லை, ஆனால் தேவனோ இரக்கத்தில் “ஐசுவரியமுள்ளவராய் பாவ நிவாரண பலியை நமக்கு அளித்திருக்கிறார். அதை புறக்கணிக்க வேண்டாம்”. அதை ஏற்று கொள்ளுங்கள். இருதய நோயினால் அவதியுறும் ஜனங்கள் இங்குள்ளனர். புற்றுநோயால் அவதியுறுபவரும் இங்குள்ளனர். மருத்துவர்கள் இவர்களுக்கு ஒன்றுமே செய்ய முடியாது. இவ்வுலகில் நீங்கள் நம்பிக்கையற்ற, உதவியற்ற, நிலையில் இருக்கின்றீர்கள். 52ஆனால் தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் பரிசுத்த ஆவியை இந்த இடத்திலேயே அனுப்பி, அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்தி, அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை நிரூபிப்பார், இதற்கு நாம் பாத்திரர் என்னும் காரணத்தினாலா? இல்லை, அவர் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர் என்னும் காரணத்தால். ஆமென். அது தான் அவர். அது தான் அந்த நபர், அது கர்த்தராகிய இயேசு அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறார். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். பெரும்பாடுள்ள ஸ்திரீக்கு அவர் எவ்வளவாக இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராக இருந்தாரோ, அவ்வளவாக இன்றும் இருக்கிறார். அவள் கூட்டத்தின் நெரிசலின் வழியாக வந்த போது, அவளுக்கு நம்பிக்கையேயில்லை. மருத்துவர்கள் தங்களால் இயன்ற மட்டும் அவளுக்கு சிகிச்சை செய்தனர். அவளுக்கு உதிரப்போக்கு இருந்தது. அவள் மரிக்கும் தருவாயில் இருந்தாள். அவள் ஆண்டவரின் வஸ்திரத்தைத் தொட்டாள் தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய், திரும்பிப் பார்த்து அவளுடைய நிலைமையைக் கூறினார். அவளுடைய உதிரப் போக்கு நின்று அவள் சுகமடைந்தாள். ஒரு வேசி ஒரு நாள் தண்ணீர் மொள்ள கிணற்றடியில் சென்றாள். அவள் நம்பிக்கையற்ற நிலையில் இருந்தாள். அவள் சுற்று புறத்திலிருந்த கன்னிகைகளாலும் ஜனங்களாலும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தாள். ஏனெனில் அவளுடைய வாழ்க்கை ஒழுக்கங் கெட்டதாயிருந்தது. அவள், “நான் முயன்று என்ன பயன்? நான் ஒதுக்கி வைக்கப்பட்டவள். எனக்கு இனி ஒன்றுமில்லை'' என்று தனக்குள்ளே சிந்தனை பண்ணினாள். ஆனால் அவள் பார்த்த போது, கிணற்றண்டையில் ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவள் தன் வாழ்க்கையில் செய்திருந்த அனைத்தையும் அவர் எடுத்துக் கூறினார். தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர். அந்நாட்களில் அவர் எவ்வளவாக இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராயிருந்தாரோ, அதே அளவுக்கு இன்றிரவும் அவர் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராயிருக்கிறார், தேவன் இரக்கத்தில்... ( ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி). 53நாம் இருநூறு ஜெப அட்டைகளை விநியோகம் செய்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். அவர்களை நாம் இப்பொழுது அழைத்து வரிசைப்படுத்தப் போகிறோம். அவர்களுக்காக நாங்கள் ஜெபிக்கப் போகிறோம். அப்படி செய்வதற்கு முன்னால், இங்கு புதிதாக வந்திருப்பவர்களில் சிலர், “எல்லா மூட நம்பிக்கைகளையும் விட்டு விலகுங்கள்'' என்று சொல்லக் கூடும். இது மூட நம்பிக்கையல்ல. இது தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறுதலாகும். நீங்கள் எந்த கோணத்தில் இதை காண்கிறீர்களோ, அதை பொறுத்தது. மனிதனில் எந்த வல்லமையும் (power) கிடையாது. ஆனால் விசுவாசிகள் என்னும் நிலையில் நமக்கு அதிகாரம் (authority) கொடுக்கப்பட்டுள்ளது. வல்லமையல்ல, அதிகாரம். சில நாட்களுக்கு முன்பு ஒருவர் என்னிடம், ”சகோ. பிரான்ஹாமே, இதை செய்ய உமக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீரா?'' என்று கேட்டார். நான், “எனக்கு வல்லமை கிடையவே கிடையாது. ஆனால் எனக்கு அதிகாரம் உண்டு” என்று விடையளித்தேன். ஒவ்வொரு விசுவாசிக்கும் அது உண்டு. அதை ஏற்க மறுத்தால் உன் நிலையிலேயே நீ இருக்க நேரிடும். ஆனால் அதை நீ ஏற்றுக் கொள்வாயானால், அது அதிகமாக பலனளிக்கும். ஏனெனில் தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராயிருக்கிறார். 54தெருவில் நிற்கும் போலீஸ்காரன் ஒருவனை உதாரணமாக எடுத்துக் கொள்வோம் அவன் உடைகள் தொள தொளவென்று தொங்கிக் கொண்டிருக்கின்றன. அவன் உடல் மெலிந்துள்ளது. ஆனால் தெருவில் 'முன்னூறு குதிரை பலன்' (Horse Power) மோட்டார்களுடன் மணிக்கு ஐம்பது மைல் வேகத்தில் விரைந்து செல்லும் கார்களை அவன் விசில் ஊதி நிறுத்தி விடுகிறான். ஒரு சைக்கிளை பிடித்து நிறுத்தக் கூடிய அளவுக்கு அவனுக்கு வல்லமை (பலம்) கிடையாது. அது உண்மை. ஆனால் அவன் விசில் ஊதி சைகை காட்டினவுடனே, கார்கள் அனைத்தும் சடுதியாக 'பிரேக்' போட்டு நின்றுவிடுகின்றன. அவனுக்கு வல்லமை கிடையாது, ஆனால் அவனுக்கு அதிகாரம் உண்டு. பட்டினம் முழுவதுமே அவன் அதிகாரத்துக்கு கீழ்ப்படிகிறது. ஒரு மனிதன் அல்லது ஸ்திரீ, நீங்கள் எந்நிலையில் இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. தேவனுடைய வாக்குத்தத்தத்தின் மூலம் உங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்து, நீங்கள் கேட்கிறதற்கும் நினைக்கிறதற்கும் அதிகமாக செய்வதாக வாக்களித்துள்ளார். “இந்த மலையைப் பார்த்து, நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும்.'' உங்களுக்கு வல்லமை கிடையாது, ஆனால் உங்களுக்கு அதிகாரம் உண்டு. அவர் என்னிடம், “நீ இருதயங்களில் மறைந்துள்ள இரகசியங்களை வெளிப்படுத்துவாய்” என்று கூறின போது... பீனிக்ஸிலுள்ள உங்களில் பெரும்பாலருக்கு அது ஞாபகமிருக்கிறதா? அவர் வாக்களித்தார். அவர் வாக்களித்ததை நிறைவேற்றினார். 55இங்குள்ள உங்களில் சிலருக்கு ஜெப அட்டைகள் இல்லாமல் இருக்கலாம். வியாதியுள்ள உங்களில் எத்தனை பேருக்கு ஜெப அட்டைகள் இல்லை? கைகளையுயர்த்துங்கள். நிச்சயமாக. சரி, நீங்கள் அறிய விரும்பினால், வல்லமையல்ல, தேவனுடைய வார்த்தையினால் கிடைக்கப் பெற்ற அதிகாரம்: நான் செய்கிறகிரியைகளை நீங்களும் செய்வீர்கள்.'' (யோவான்: 14:15) இயேசு, தம்முடைய வருகைக்கு முன்பாக, நோவாவின் காலத்தைப் போன்ற காலம் ஒன்றிருக்கும் என்று லூக்கா: 17:30-ல் வாக்களிதுள்ளார். “ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண் கொண்டு கொடுத்தார்கள். நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள் வரைக்கும் இதை அறியாதிருந்தார்கள்.'' (லூக்: 17:27). அப்படிப்பட்ட ஒரு காலம் வரும் என்று அவர் கூறியுள்ளார். அவர் மேலும், ”லோத்தினுடைய நாட்களில் நடந்தது போல மனுஷ குமாரன் வெளிப்படும் கடைசி நாட்களிலும் நடக்கும்...'' என்றார். 56மனுஷகுமாரன் எவ்வாறு ஒரு தூதனுடைய வடிவில் தம்மை வெளிப்படுத்தினார் என்று பாருங்கள். அந்த தூதன் மனுஷகுமாரன், முற்றிலுமாக. ஆபிரகாம் அவரை 'ஏலோகிம்' என்று அழைத்தான். புறஜாதி உலகம் எரிந்து அழிவதற்கு முன்னால் மனுஷகுமாரன் தம்மை வெளிப்படுத்தினார். அவர் யாருக்கு தம்மை வெளிப்படுத்தினார்? விசுவாசிக்கு. பாவனை விசுவாசிக்கு அவர் இரண்டு போதகர்களை பிரசங்கம் செய்யும் படியாக அனுப்பினார். ஆனால் உண்மையான விசுவாசிக்கோ அவர் கூடாரத்திற்கு தம் முதுகை திருப்பி நின்று, “ஆபிரகாமே'' என்றழைத்தார், அதற்கு சில நாட்களுக்கு முன்பு அவன் பெயர் ''ஆபிராம்'' என்றிருந்தது. இப்பொழுது அது ”ஆபிரகாம்'' என்று மாற்றப்பட்டது. “ஆபிரகாமே, உன் மனைவி சாராள் எங்கே?'' என்றார். அவன், “உமது பின்புறத்தில் கூடாரத்தில் இருக்கிறாள்'' என்றான். அவர், “நான் உனக்களித்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றப் போகிறேன், உன்னிடத்திற்கு நான் திரும்ப வருவேன்'' என்றார். ஓ, ஆபிரகாம் நூறு வயது சென்றவனாயிருந்தான். சாராளுக்கு அப்பொழுது தொண்ணூறு வயது. ஆனால் தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் தமது வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார். அதன் விளைவாக அவர்களுக்கு குழந்தை பிறந்தது. தேவன் இரக்கம் நிறைந்தவராயிருக்கிறார். அவர் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர். அவர் தமது வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிறவராயிருக்கிறார். 57கவனியுங்கள், அவர் தமது முதுகை கூடாரத்தின் பக்கம் திருப்பினவராய் நின்று கொண்டிருந்தார். சாராள் நகைத்து, “இது எப்படி முடியும்? நானோ கிழவி. ஒரு இளம் பெண்ணைப் போல என் கணவரிடம் எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ? அவருக்கும் நூறு வயது ஆகிவிட்டது. எங்கள் தாம்பத்ய உறவு அநேக ஆண்டுகளுக்கு முன்பே நின்று விட்டதே! இது எப்படி முடியும்'' என்று சொல்லி அவள் நகைத்தாள். அந்த தூதன்... மனுஷ குமாரன் தம் முதுகை கூடாரத்தின் பக்கம் திருப்பினவராய், “சாராள் நகைத்து, நான் பிள்ளை பெறுவது மெய்யோ என்று சொல்வானேன்?'' என்று கேட்டார். அது என்ன? இயேசு லூக்கா. 17:30-ல், ”லோத்தினுடைய நாட்களில் நடந்தது போல'' - அதே சூழ்நிலை, புறஜாதி உலகம் எரிந்து அழிவதற்கு முன்னால் - “மனுஷ குமாரன் அந்த நாளில் தம்மை வெளிப்படுத்துவார்'' என்றார். அவர் அந்த வாக்குத்தத்தத்தை அளித்திருந்தார். ஒரு செய்தி புறப்பட்டு வந்து ஜனங்களை மூல பெந்தேகோஸ்தே செய்திக்கும் அதே ஆசிர்வாதங்களுக்கும் திருப்பும் என்று மல்கியா. 4 வாக்களித்துள்ளது. அது என்ன? இரு செட்டைகளைக் கொண்ட கழுகு - புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு என்னும் செட்டைகள் - அதன் வாக்குத்தத்தங்களை ஒருங்கே சிறகடித்து, தேவன் வேதாகமத்தில் அளித்துள்ள வாக்குத்தத்தங்களை நிறைவேற்றி வருகின்றது. ஆமென்! 58தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய், இந்த லவோதிக்கேயா சபையின் காலத்தில் அவருடைய பிள்ளைகள் ஸ்தாபனங்களின் ஐசுவரியத்திலும் உலக காரியங்களிலும் சிக்கிக்கொள்ள அனுமதிக்காமல், அதனின்று தப்பித்துக் கொள்ள ஒரு வழியை உண்டு பண்ணினார். ஜனங்களே, அதை நம்புங்கள், கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாரக! ஆமென். தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர். நான் வாஞ்சிக்கும் ஒன்றே ஒன்று தேவனுடைய இரக்கங்களே, அவருடைய நீதியையோ, பிரமாணங்களையோ அல்ல, “தேவனே, என்மேல் இரக்கமாயிரும்'' என்று அவருடைய இரக்கங்களையே விரும்பி அழைக்கிறேன். இத்தகைய உணர்வு நம் எல்லோருக்குமே உண்டு. நான் கவனித்துக் கொண்டே வந்தேன். அங்கே ஒரு ஸ்திரீ வரிசையின் மூலையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். உன்னிடம் ஜெப அட்டை இருக்கிறதா? தேவன் இரக்கத்தில் ஐசுரியமுள்ளவர் என்பதை உனக்குக் காண்பிக்கட்டும். சிறிது காலமாக நீ நரம்புதளர்ச்சியினால் மிகவும் அவதியுறுகின்றாய். உன் நிலைமை மிகவும் மோசமாயுள்ளது, உன் கண்பார்வை மங்கிவிட்டது. அது உண்மையா? அது உண்மை. அந்நிலைமை இப்பொழுது மாறிவிடும். இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன், அதை நீ விசுவாசிக்கிறாயா என்று உன்னிடம் கேட்கிறார். உன்னிடம் ஜெப அட்டை இல்லை, உன்னிடம் ஒன்றுமில்லை. அது உனக்கு அவசியமில்லை. பார், தேவனுடைய கிருபை உனக்கு அருளப்பட்டது. 59ஒரு சிறுவன் முன்வரிசையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு உடலில் ஏதோ வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அவனுக்கு அண்மையில் தான் அது ஏற்பட்டது. அது சரியா, ஐயா? அது சரி. அது என்னவென்று உனக்குத் தெரியவில்லை. அதைக் குறித்து நீ மிகவும் பயந்து கொண்டிருக்கிறாய், அது உண்மை, எங்கேயோ விழுந்து ஏற்பட்ட காயத்தின் விளைவாக அது உண்டாயிருக்கிறது இல்லையா? உன்னிடம் ஜெய அட்டை உள்ளதா? இல்லை. உனக்கு அது அவசியமில்லை தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர். ஓ, சகோதரனே, சகோதரியே, தேவனை விசுவாசி அவரை சந்தேகிக்காதே. அவரை விசுவாசி. சரி! இங்கு ஒரு மனிதன் சாம்பல் நிற சூட்டும் மூக்குக் கண்ணாடியும் அணிந்து கொண்டு அமர்ந்திருக்கிறார், ஐயா என்னைப் பாருங்கள், நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர். நீங்கள் குடல் பிதுக்கத்தினால் (henia) அவதியுறுகிறீர்கள். தேவன் உங்களை குணமாக்க முடியும் என்று விசுவாசிக்கிறீர்களா? அந்த வரிசையின் கடைசியில் அமர்ந்து கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருப்பவரே, அந்த குடல் பிதுக்கத்தை தேவன் குணமாக்க முடியும் என்று நீங்கள் விசுவாசித்து அதை ஏற்றுக் கொண்டால் அதை நிச்சயம் அவர் உங்களுக்குச் செய்வார், நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? சரி. நீங்கள் விசுவாசித்தால், இரக்கத்தையும் சுகத்தையும் தேவனிடமிருந்து பெற்றுக் கொள்வீர்கள். ஆம். ஐயா. 60இங்கு ஒரு ஸ்திரீ அமர்ந்திருக்கிறாள். அவள் உடலில் இரத்த ஓட்டம் சரியாயில்லை, அவள் விசுவாசித்தால் தேவன் அவளைக் குணப்படுத்துவார், அவள் விசுவாசித்தால். அவள் அதை இழந்துவிடுவாள் என்று நினைக்கிறேன் அவள் மேல் இரக்கமாயிரும் என்பதே என் ஜெபமாயுள்ளது. அந்த ஸ்திரீயின் நிலையை நான் தெளிவாகக் காண்கிறேன்... திருமதி. ரைலி, அந்த மோசமான இரத்த ஓட்ட நிலையை தேவன் குணமாக்க முடியும் என்று விசுவாசிக்கிறாயா?அப்படியானால் அதை பெற்றுக் கொள். ஆமென். விசுவாசிக்க மாத்திரம் செய். தேவன் நல்லவர், இல்லையா ஸ்டெல்லா? ஆம். அது உண்மை, அந்த ஸ்திரீயை என் வாழ்க்கையில் கண்டதில்லை. ஆனால் தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய்! இங்கு வேறொரு ஸ்திரீ பின்னால் அமர்ந்து கொண்டு என்னையே நோக்கிக் கொண்டிருக்கிறாள். அவளும் மோசமான இரத்த ஒட்டத்தினால் அவதியுறுகிறாள். அவள் அதை குறித்து அப்பொழுது யோசித்துக் கொண்டிருந்தாள். அந்த ஸ்திரீயை என் வாழ்க்கையில் நான் கண்டதில்லை. மற்ற ஸ்திரீக்கும் அதே கோளாறு தான் இருந்தது. என்னைப் பார். நான் தேவனுடைய தீர்க்கதரிசி, அவருடைய ஊழியன், என்று விசுவாசிக்கிறாயா? உனக்கு இருதயக் கோளாறு வேறு உள்ளது. அது உண்மையானால், உன் கையையுயர்த்து. இப்பொழுது அது உனக்கில்லை. அது குணமாகிவிட்டது. இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன் தம்மை உயிரோடிருக்கிறவராக இன்றிரவு இக்கட்டிடத்தில் நிரூபித்து வருகிறார். தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர். ஆமென். 61இங்குள்ள எத்தனை பாவிகள், பின்வாங்கிப் போனவர்கள் எழுந்து நின்று, “இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே! என் மேல் இரக்கமாயிரும்'' என்று சொல்லக் கூடும்? எழுந்து நில்லுங்கள். உங்களுக்காக ஜெபிக்கப் போகிறேன்... உங்களுக்கு இரக்கம் அவசியம் என்று நீங்கள் விசுவாசித்தால், கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக! கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக! கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக! பின்வாங்கிப் போனவர்களே எழுந்து நில்லுங்கள், தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராயிருக்கிறார். இது இந்த மணி நேரத்துக்குரிய வாக்குத்தத்தம் என்பதை அறிந்து கொள்ளாமலிருக்கும் அளவுக்கு நீங்கள் உணர்ச்சியற்று போய் விடவில்லை. இது இந்த மணிநேரத்துக்குரிய வாக்குத்தத்தம் என்பதை அறிந்து கொள்ளாமலிருக்கும் அளவுக்கு நீங்கள் நிச்சயமாக ஸ்தாபனங்களுடன் ஈடுபாடு கொண்டிருக்கவில்லை தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராயிருக்கிறார். எழுந்து நின்றிருப்பவர்கள் யாராயிருப்பினும், உங்களுக்காக இன்னும் சிறிது நேரத்தில் ஜெபிக்கப் போகிறேன். நீங்கள் ஏதாவது ஒரு முழு சுவிசேஷ சபையில் சேர்ந்து கொண்டு, கிறிஸ்தவ ஞானஸ்நானத்தைப் பெற வேண்டுமென்று விரும்புகிறேன். அப்பொழுது தேவன் உங்களுக்கு பரிசுத்த ஆவியை அருளுவார். 62வேறு யாராகிலும் எழுந்து நின்று, “நான் நினைவு கூரப்பட விரும்புகிறேன். தேவனே, உமது கிருபையின்படி என்னை நினைவுகூரும். நான் வாழ வேண்டிய பிரகாரம் வாழவில்லை'' என்று கூற விரும்புகிறீர்களா? கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக. கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக. ”இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, என் மீது இரக்கமாயிரும்'' சகோதரியே, கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக. இன்னும் இங்குள்ள எத்தனை பேர், ''நான் எழுந்து நிற்பேன். நான் இரக்கத்தைப் பெற விரும்புகிறேன் என்று, தேவன் அறிய விரும்புகிறேன். நான் சரியானபடி வாழவில்லை. நான் இப்படியும் அப்படியுமாக வாழ்ந்து வந்தேன். அவருடைய இரக்கத்தை பெற விரும்புகிறேன்'' என்று கூற ஆயத்தமாயிருக்கிறீர்கள்? சகோதரனே, கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக. வேறு யாராகிலும், “தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர்” என்று சொல்ல விரும்புகின்றனரா? சகோதரியே, கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக, சகோதரியே, கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக, தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர். அது உண்மை. கர்த்தர் உன்னையும் ஆசிர்வதிப்பாராக. பின்னால் உள்ள உன்னையும் கர்த்தர் ஆசிர்வதிப்பாராக. கர்த்தர் உன்னைப் பார்க்கிறார். எழுந்து நில். “சகோ. பிரான்ஹாமே, எழுந்து நிற்பதனால் ஏதாகிலும் பலன் உண்டா?'' என்று நீ கேட்கலாம். எழுந்து நின்று வித்தியாசத்தை பார். நீ உண்மையாகவே உத்தம இருதயத்துடன் இருப்பாயானால் தேவன் உனக்கு இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராயிருப்பார். ”ஒருவரும் கெட்டுப் போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று“ அவர் விரும்புகிறார். தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர். ஓ தேவனே, எங்கள் மேல் இரக்கமாயிரும். 63உங்களில் எத்தனை பேரிடம் ஜெப அட்டைகள் உள்ளன? அவை என்ன? 'ஏ' வரிசையும், 'பி' வரிசையும். அல்லவா? 'ஏ' வரிசை ஜெப அட்டை வைத்திருப்பவர்கள் இந்த பக்கத்தில் நில்லுங்கள். 'பி' வரிசை ஜெப அட்டை வைத்திருப்பவர்கள் அவர்கள் பின்னால் நில்லுங்கள். இங்குள்ள போதகர்களில் சிலருக்கு எனக்கு உதவி செய்ய விருப்பம் உண்டா? அப்படியானால் மேலே வாருங்கள். உங்கள் உதவியைப் பெற நான் மகிழ்ச்சியடைவேன். உங்களுடன் சேர்ந்து ஜெபிக்க எங்களுக்கு மகிழ்ச்சியாயிருக்கும். “விசுவாசிக்கிறவர்களால் இன்னின்ன அடையாளங்கள் நடக்கும்” என்று வேதம் கூறுகின்றது. ஆம், ஐயா. “என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்.'' நாம் அப்படி செய்திருக்கிறோமா தேவனுடைய கிருபையினால். நாம் அல்ல, தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய், தமது வார்த்தையை நிறைவேற்ற நம்மில் அப்படி செய்திருக்கிறார். சக்கர நாற்காலிகளை நீங்கள் முன்னால் கொண்டு வர விரும்பினால், உங்களுக்காக நாங்கள் இங்கேயே ஜெபம் செய்வோம். அவர்கள் இங்கே வரட்டும். நாங்கள் அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் ஜெயம் செய்வோம், தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர். 64...நீங்கள் வலது பக்கத்தில் சில நிமிடங்கள் நிற்பீர்களா? சகோ. பிரவுன் உங்களுடன் வந்திருக்கிறாரா? (ஒரு சகோதரன், 'நாளை வருவார்' என்று கூறுகிறார் - ஆசி). நாளை வருகிறாரா? 'இன்றே வருவார்' என்று நினைத்தேன். சகோ. அவுட்லா எங்கே? சகோ. ஃபுல்லர் எங்கே? நான் முதன் முறையாக இங்கு வந்த போது என்னுடன் மேடையின் மேல் இருந்தவர்கள் இப்பொழுது மீண்டும் மேடைக்கு வரட்டும். அந்த பழைய நாகரீகமான ஜெப வரிசைகள் உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? நான் ஜெபம் செய்து செய்து பலவீனமாகி, ஒருவர் ஒரு பக்கத்திலும் வேறொருவர் மற்றொரு பக்கத்திலும் என்னைப் பிடித்துக் கொள்வீர்களே! தொடக்கத்தில் நடந்த கூட்டங்களில் பங்கு கொண்டவர்கள் எத்தனை பேர் இங்குள்ளனர்? இங்கு பாருங்கள்! நான் உத்தமமாயிருந்தால் இவையெல்லாம் நடக்கும் என்று இயேசுகிறிஸ்து என்னிடம் சொன்னார் என்று நான் உங்களிடம் கூறினது ஞாபகமிருக்கிறதா? அது சரிதானா? அந்நாட்களில் நடந்தது போன்ற வேறொன்று நிகழவேயில்லை. தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய், தமது வாக்குத்தத்தத்திற்கு உண்மையுள்ளவராய் இருந்த காரணத்தால் அப்படி நடந்தது. ஆமென்... ஆமென்! தேவனுக்கு ஸ்தோத்திரம்! அல்லேலூயா! ''ஓ, அவர்களில் ஒருவனாக நான் இருப்பதால் மகிழ்ச்சியுறுகிறேன்.'' ஆமென். ஓ, என்னே! எல்லாவிடங்களிலுமுள்ள ஜனங்களின் இருதயங்கள் பெந்தேகோஸ்தே அன்று விழுந்த அக்கினியால் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கின்றன அது அவர்களைச் சுத்திகரித்து சுத்தமாகச் செய்தது ஓ, அது இப்பொழுது என் இருதயத்தில் கொழுந்து விட்டு எரிகிறது ஓ,அவருடைய நாமத்திற்கே மகிமை அவர்களில் ஒருவனாக இருக்கிறேன் என்று கூறுவதற்கு, மகிழ்ச்சியுறுகிறேன் 65ஓ, நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனுமாயிருந்த நான் இப்பொழுது அவருடைய இரக்கத்தின் ஐசுவரியத்தினால் தேவனுடைய ராஜ்யத்தைக் காண முடிகிறது. ஆமென். அவருடைய கட்டளைகள் எவ்வளவு அழகானவை! என் சகோதரனே, உன் கக்கதண்டத்தின் உதவியால் நில். உன்னால் எழுந்திருக்க முடியவில்லையென்றால் பரவாயில்லை. நாங்கள் அங்கு வந்து உனக்காக ஜெபம் செய்வோம். 'ஏ', 'பி' ஜெப அட்டை வைத்திருப்பவர்கள் மற்ற பாகத்தில் வந்து வரிசையில் நில்லுங்கள். நாங்கள் அவர்களுக்காக ஜெபம் செய்யப் போகிறோம். போதகர் சகோதரர்களே, வியாதியஸ்தர்களின் மேல் கைகளை வைப்பதில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், இங்கு வந்து என்னுடன் மேடையின் மேல் நில்லுங்கள். நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப் போகிறோம். 66ஜெப வரிசையில் நிற்பவர்களே, தேவனுடைய சமுகம் இங்குள்ளது என்றும், பரிசுத்த ஆவியானவர் நம்மத்தியில் இருந்து கொண்டு, அவர் சொன்னபடியே செய்து கொண்டு வருகிறார் என்று உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால்; உங்களைச் சுகப்படுத்த எனக்கு வல்லமையிருந்தால், நான் நிச்சயம் உங்களை சுகப்படுத்திவிடுவேன். உங்களை சுகப்படுத்த எனக்கு ஏதாவது வழி இருக்குமானால், நான் நிச்சயம் அதை செய்வேன். ஆனால் எனக்கு அந்த வல்லமை கிடையாது... தேவன் ஒரு சிறு வரத்தை எனக்கு அளித்துள்ளார். நான் பெரிய பிரசங்கியல்ல. இன்றைய பிரசங்கியாகும் தகுதி பெற எனக்குப் போதிய படிப்பு கிடையாது, இக்காலத்தில் பிரசங்கியாவதற்கு வேத பாண்டித்ய அனுபவமும், டாக்டர் பட்டமும் அவசியம். அந்த தகுதி எனக்குக் கிடையாது. ஆனால் தேவன், அவருக்கு ஏதாவதொன்றை செய்ய வேண்டுமெனும் விருப்பம் எனக்குள்ளது என்று அறிந்து என் இருதயத்தை அறிந்தவராய், இந்த வரத்தை எனக்கு அளித்துள்ளார். அதற்காக அவருக்கு நான் நன்றி பாராட்டுகிறேன். 67அன்றொரு நாள் ஒருவர் என்னிடம், “திரு. பிரான்ஹாம் அவர்களே, நீர் மிகவும் அருமையானவர். ஆனால் நீர் உத்தமமாகவே தவறு செய்கிறவராயிருக்கிறீர். நீர் தேவனுடைய சித்தத்திற்குப் புறம்பாயிருக்கிறீர். முடிவில் நீர் ஆக்கினைக்குள்ளாவீர் என்று உமக்குத் தெரியுமா?'' என்றார். நான், “உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன் விவாதத்திற்காக நீர் கூறுவது சரியென்றே வைத்துக் கொள்வோம். நான் தவறாயிருந்தால், நான் தவறில்லையென்று நினைக்கிறேன், நான் தவறாயிருந்தால், நூறாண்டு காலம் நான் வாழப் போகிறேன் என்றும், முடிவில் அவர் என்னைக் கண்டனம் செய்து, ”வில்லியம் பிரான்ஹாமே, பரலோகத்திற்குள் பிரவேசிப்பதற்கு நீ அபாத்திரன். ஆகவே புறம்பான இருளில் செல்வாயாக என்று கூறுவாரென்று நான் அறிந்தாலும், என் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் அவரைச் சேவிப்பேன். ஏனெனில் அபாத்திரனான நான் அவருடைய ஆசிர்வாதங்களை அபரிமிதமாகப் பெற்றுள்ளேன். என் ஜீவனைக் காட்டிலும் அவர் மேலானவர்'' என்றேன். நான்... அவர் எல்லாவுமாயிருக்கிறார் 68எனக்குள்ளதெல்லாம், நான் இனி பெறப் போவதெல்லாம், அவருடைய கிருபையினாலும், இரக்கத்தினாலும் அவரிடமிருந்து பெற்றுக் கொண்டவைகளே. நான் நிர்பாக்கியமுள்ளவனாயும், பரிதபிக்கப்படத் தக்கவனாயும், தரித்திரனாயும், குருடனாயும், இருந்தேன், ஆனால் அவருடைய கிருபையினால் அவர் எனக்கு சுகத்தையளித்தார். நான் தேவனுடைய கிருபையினால் திடகாத்திரமுள்ளவனாயும், ஆரோக்கியமுள்ளவனாயும், இருக்கிறேன். எனக்கு நல்ல கண் பார்வை உள்ளது. எனக்கு தேவையான ஆகாரம் உள்ளது, எனது தேவைகளை (needs) நிறைவாக்குவதாக அவர் வாக்களித்துள்ளாரேயன்றி, நான் விரும்பினவை அனைத்தையும் (wants) தருவதாக அவர் வாக்களிக்கவில்லை, அந்நாளிலே நான் புறம்பாக்கப்பட்டால்... நான் எங்கிருப்பேன் என்று எனக்குத் தெரியாது. நான் தவறென்று எனக்குத் தெரிந்து, நான் தவறு செய்ய தேவன் என்னைத் தெரிந்து கொண்டிருந்தால், நான் தவறாயிருக்கவே விரும்புவேன். ஏனெனில் அவருடைய சித்தத்தை செய்வதே என் குறிக்கோள். அவருடைய சித்தத்தை செய்ய வேண்டும் என்னும் அளவுக்கு அவரை நான் நேசிக்கிறேன். அது ஒரு பெரிய வாக்குமூலம் தான். நான் என்ன அர்த்தத்தில் அதை கூறினேனோ, அதை நீங்கள் கிரகித்துக் கொண்டீர்கள் என்று நம்புகிறேன். அவருடைய சித்தத்தை செய்யவே நான் விரும்புகிறேன். சில சமயங்களில் அவரிடத்தில் நான் ஏதாவதொன்றைக் கேட்பேன். அவர் 'முடியாது' என்று தலையசைத்துவிடுவார். அவர் 'சரி' என்று சொல்லியிருந்தால் நான் எவ்வளவு மகிழ்ச்சியுற்றிருப்பேனோ, அவ்வளவு மகிழ்ச்சியை அவர் 'முடியாது' என்று சொல்லும்போதும் பெறுகிறேன். ஏனெனில், நாம் எப்பொழுதும் “உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக'' என்று அவரிடம் கூற வேண்டியவர்களாயிருக்கிறோம், அவருடைய 'இல்லை' என்பது... அது அவருடைய சித்தமாயிருக்குமானால்... அவருடைய 'சரி' என்பதைக் காட்டிலும் மேலானதாக இருக்கும், அதுவே அவருடைய சித்தமாக இருக்குமானால் அவரை நீங்கள் உண்மையாக நேசித்தால், அது அப்படித்தான் உங்களுக்கு இருக்கும். ஆமென். 69அவரைக் குறித்து நான் பேசத் தொடங்கினால் என்னால் நிறுத்தவே முடியாது, ஓ, அவர் எனக்கு மிகவும் தத்ரூபமானவர். நண்பர்களே, நான் என்னவாயிருக்கிறேனோ, நான் இனி என்னவாயிருப்பேனோ, நான் என்னவாயிருப்பேன் என்று எதிர்பார்க்கிறேனோ, இவையனைத்தும் வார்த்தையாகிய கிறிஸ்து இயேசுவில் அஸ்திபாரமிடப்பட்டுள்ளது. எனக்கெல்லாம் அவரே. பரிசுத்த ஆவியானவரின் சாட்சிக்காகவும், செய்திக்காகவும் இன்றிரவு நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். சிலர் என்னுடன் இணங்கமாட்டார்கள் என்று நானறிவேன், ஆனால் நான் ஒரு செய்திக்கு கடமைப்பட்டவனாயிருக்கிறேன். ஒரு அடையாளம் (sign) புறப்பட்டு சென்றது. அவர் தேவன் என்பதைக் காண்பிக்க அவர் ஒரு அடையாளத்தை மாத்திரம் அனுப்புகிறதில்லை. ஒரு செய்தி, ஒரு சப்தம் (voice) அடையாளத்தை எப்பொழுதும் பின்தொடர வேண்டும். அது எல்லோருக்கும் தெரியும். இயேசு அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்கிறவராக வந்தார். அவர் அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்தபோது, மகத்தான மனிதராகக் கருதப்பட்டார் ஆனால் அவர், “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” போன்ற செய்தியைக் கொண்டு வரத் தொடங்கின போது, அது அவர்களுக்கு தவறாகத் தென்பட்டது, பாருங்கள்? சப்தம் அடையாளத்தை பின் தொடர வேண்டியதாயிருந்தது. 70மோசேக்கு இரு அடையாளங்கள் கொடுக்கப்பட்டன. ஒவ்வொரு அடையாளத்துக்கும் ஒரு சப்தம் இருந்தது. அது உண்மை. சில நாட்களுக்கு முன்பு 'அடையாளத்தின் சப்தம' (The voice of the Sign) என்பதன் பேரில் நான் பிரசங்கித்தேன், அடையாளத்திற்கு சப்தம் அவசியம். அடையாளம் சப்தமாக மாறிவிடுகிறது. எக்காலத்தும் அது அவ்வாறே இருந்து வந்துள்ளது. அது அவ்வாறு இல்லையெனில், அது தேவனிடத்திலிருந்து வரவில்லை. ஒரு மனிதன் ஒரு வினோதமான ஊழியத்துடன் வந்து, அது சத்தியம் என்று வேதத்தில் காணப்பட்டு, அதே சமயத்தில் அந்த மனிதன் ஸ்தாபனங்களின் போதகங்களில் நிலை கொள்வாரானால், அந்த ஊழியத்தை மறந்துவிடுங்கள். அது ஒன்றுமில்லை. தேவன் அவ்வாறான ஒரு காரியத்தை செய்யவே மாட்டார். அது அழுகி, புழுத்துப்போன மன்னா, அதில் புழுக்கள் நிறைய இருக்கின்றன. நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு விழுந்த பழைய மன்னாவை அவர்கள் புசிக்கத் தலைப்படுகின்றனர். இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பிரயாணத்தில் ஒவ்வொரு நாளும் புது மன்னாவை சேகரித்தனர். அதை அடுத்த நாள் வைத்திருக்க முடியாது. கடந்துபோன ஏதோ ஒரு காலத்தில் நாம் வாழ்பவர்கள் அல்ல. நாம் சென்று கொண்டிருக்கும் பயணத்தில் வானத்திலிருந்து விழும் புதிய மன்னாவை நாம் புசித்துக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது நாம் தலை வணங்குவோம்: 71தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய சமுகம் மிகவும் தத்ரூபமாயுள்ளது. ஆண்டவரே, உமது கிருபையை நான் நினைவு கூருகிறேன். நீர் எத்தனையோ காரியங்களைச் செய்வதை நாங்கள் கண்டிருக்கிறோம், நீர் உமது ஜனங்களின் மூலம் அந்நிய பாஷை பேசுவதையும், அதற்கு அர்த்தம் உரைப்பதையும் நாங்கள் கேட்டிருக்கிறோம். ஓ, தேவனே, நீர் பிணியாளிகளை குணமாக்கி, குருடரின் கண்களைத் திறந்து, முடவர்களை நடக்கச் செய்து, செவிடர்களைக் கேட்கச் செய்து, ஊமையரைப் பேசச் செய்வதை நாங்கள் கண்டிருக்கிறோம், நீர் எவ்வளவு மகத்தான, வல்லமையுள்ள தேவன்! இவைகளை நீர் கடைசி நாட்களில் செய்வீரென்று வாக்குத்தத்தம் செய்திருக்கிறீர் என்பதை அறிந்திருக்கிறோம். இன்று அநேக மாமிசப்பிரகாரமான பாவனைகள் எங்கள் மத்தியில் இருந்த போதிலும், உண்மையான தேவன் எங்கோ இருக்கிறார் என்பதையே அது நிரூபிக்கிறது. பரலோகப் பிதாவே, இன்றிரவு நீர் இங்குள்ளதை அறிந்து கொள்ள, நாங்கள் அதிகமாக தேவனைப் பற்றிய உணர்வைப் பெற வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். இந்த ஜெப வரிசையிலுள்ள ஜனங்கள், இந்த வரிசையின் வழியாக கடந்து வரும்போது, ஆண்டவரே... அவர்களுக்கு தாங்கள் வாக்களித்தபடியால் இதை செய்கிறோம். “விசுவாசிக்கிறவர்களால் இன்னின்ன அடையாளங்கள் நடக்கும்” என்று நீர் சொல்லியிருக்கிறீர். இங்கு போதகர் சகோரர்கள் நின்று கொண்டிருக்கின்றனர். அவர்களை இந்த ஊழியத்திற்கென உலகத்தோற்றத்திற்கு முன்பே நீர் முன்குறித்துவிட்டீர். உலகம் என்று ஒன்று உண்டாகும் முன்னமே, இன்றிரவு நாங்கள் இங்கு நின்று கொண்டிருப்போம் என்று நீர் அறிந்தவர். ஏனெனில் நீர் முடிவற்றவர். 72ஆகவே பரலோகப் பிதாவே, இன்றிரவு, வியாதியுற்ற இந்த ஜனங்கள், முடவர்கள், குருடர்கள், ஊனமுற்றவர்கள், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் யாராயிருந்தாலும், இந்த வரிசையில் கடந்து வரும் போது, அவர்கள் இதை ஏற்றுக் கொண்டு, அவரை நோக்கிப் பார்த்து அதை புரிந்து கொண்டால், அவர்களுடைய இருதயத்தின் சிந்தனைகளை அறிந்துள்ள தேவன் அவர்களை சுகமாக்குவார் என்று உணருவார்களாக. ஒரு மனிதன் வெறுமனே வெண்கல சர்ப்பத்தை மாத்திரம் நோக்கிப் பார்த்தால், அவன் சுகப்படவே முடியாது, ஏனெனில் அதன் அர்த்தத்தை அவன் புரிந்து கொள்ளவில்லை. இன்றைக்கும் ஆண்டவரே, அவ்விதமாகவே உள்ளது. அவர்கள் ஒரு வரத்தை மாத்திரம் நோக்கிப் பார்த்து, அது அவர்களுக்கு உதவி செய்யும் என்று அவர்கள் எண்ணினால், அவர்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தமாகிறது, வரம் என்பது சுகமாக்குவதற்கு தேவன் அங்கு பிரசன்னராயிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் ஒன்றாக உள்ளது. பிதாவே, அதை அருள்வீராக. அது நிறைவேறட்டும். இயேசுவின் நாமத்தில், ஆமென். 73பியானோ வாசிப்பவர், ஆணாகிலும் பெண்ணாகிலும், அங்கு சென்று, “மாபெரும் வைத்தியர் இப்பொழுது அருகில் உள்ளார், அனுதாபங் கொள்ளும் இயேசு'' என்னும் பாடலை இசைக்கவும் பியானோ வாசிப்பவர் எங்கிருப்பினும். இந்தியானாவிலுள்ள ஃபோர்ட் வேயினில் நிகழ்ந்த, முதன் முறையாக நான் நடத்தின சுகமளிக்கும் ஆராதனைகளில் ஒன்று என் நினைவுக்கு வருகிறது. அப்பொழுது அந்த ஆமிஷ் சிறுமி “மாபெரும் வைத்தியர் இப்பொழுது அருகில் உள்ளார். அனுதாபங் கொள்ளும் இயேசு” என்னும் பாடலை பியானோவில் வாசித்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது ஒரு குழந்தை என்னிடம் மேடைக்குக் கொண்டு வரப்பட்டது. அது முடமாயிருந்தது. நான் அந்த குழந்தைக்காக ஜெபம் செய்தபோது, அது என் கையை விட்டு குதித்து மேடையின் மேல் ஓடத் தொடங்கினது. இதை கண்ட அதன் தாயார் அங்கேயே மயங்கி விழுந்தாள் அதன் பாட்டி தன் கைகுட்டையை மேலே எறிந்து விட்டு, கண்ணீர் வடிக்கத் தொடங்கினாள். இந்த ஆமிஷ் பெண்ணுக்கு பெந்தேகோஸ்தேயினரைக் குறித்து ஒன்றுமே தெரியாது. ஏனெனில் அவள் ஆமிஷ் சபையை சோர்ந்தவள். அவள் பியானோ வாசித்துக் கொண்டிருந்தாள். இதை கண்டதும் அவள் குதித்தெழுந்தாள். அவளுடைய நீந்த கூந்தல் அவிழ்ந்தது. அவள் ஆவியால் நிறைந்து அந்நிய பஷையில் அந்த பாடலைப் பாடத் தொடங்கினாள். அப்பொழுது அந்த பியானோ ஒரு சுருதி கூட தப்பாமல் தானாகவே, “மாபெரும் வைத்தியர் இப்பொழுது அருகில் உள்ளார். அனுதாபங்கொள்ளும் இயேசு'' என்னும் பாடலை இசைத்தது. ஆமென்! அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். லூக்கா: 8:50. 74இப்பொழுது நாம் ஜெபம் செய்வோம்... வெளியிலுள்ளவர்களும் ஜெபம் செய்யுங்கள். ஜெப வரிசையில் வருபவர்களே, உங்கள் மேல் கைகளை வைத்து நாங்கள் ஜெபம் செய்யும் போது, “நீ விசுவாசித்தால் சுகம் பெறுவாய்” என்னும் இயேசுவின் வார்த்தைகளை நினைவு கூருங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நாம் அனைவரும் ஒருமித்து பாடுவோம்: மாபெரும் வைத்தியர் இப்பொழுது அருகில் உள்ளார் அனுதாபங் கொள்ளும் இயேசு அவர் பேசி இருதயங்களை உற்சாகப்படுத்துகிறார் (நாம் பாடும் போது கண்களை மூடுவோம்) ஓ, இயேசுவின் சத்தத்தைக் கேள் சேராபீன்களின் பாட்டில் இனிய நாதம் அழிந்து போகிறவர்களின் நாவில் இனிய நாமம் பாடிய பாட்டுகளில் இனிய கீதம் (பிதாவாகிய தேவனே, ஜனங்களின் மேல் அசைவாடும்) ஓ இயேசு, ஆசிர்வதிக்கப்பட்ட இயேசு. “மாபெரும்...'' இப்பொழுது நீங்கள் வரிசையில் நடந்து வரும்போது, அவர் இங்கு இருக்கிறார். ஒன்று என் வார்த்தையை நம்புங்கள். இல்லையேல், நீங்களாகவே நம்புங்கள். அவர் இங்கு பிரசன்னமாயிருக்கிறார். வெளியில் இருக்கும் ஒவ்வொருவரும் இவர்களுக்காக ஜெபியுங்கள். 75என்னோடு சேர்ந்து பாடுங்கள். தளர்ந்து போன இருதயத்தாரிடத்தில் உற்சாகமடையும் படிக்கு... (பேசுகிறார்) ஆண்டவரே நம்பிடுவேன், ஆண்டவரே நம்பிடுவேன். யாவும் கைகூடிடும், ஆண்டவரே நம்பிடுவேன். நம்புகிறவர்கள் அனைவரும் உங்கள் கைகளையுயர்த்தி, “நான் நம்புகிறேன்'' என்று சொல்லுங்கள் (சபையோர், ”நான் நம்புகிறேன்'' என்கின்றனர் - ஆசி). இங்கு ஒரு மனிதன் அமர்ந்திருக்கிறார். நான் பேச்சை நீட்டிக் கொண்டு போன காரணம் என்னவெனில், இவர் புற்று நோயால் மரித்துக் கொண்டிருக்கிறார். அவர் கக்கதண்டத்தை ஊன்றி நடப்பவர். தேவன் உதவி செய்தாலொழிய, அவரால் உலகில் உயிர் வாழ எந்த வழியும் இல்லை, அவருடைய குடல் முழுவதும் புற்று நோய் கண்டுள்ளது. தேவன் இரக்கம் காண்பிக்காவிடில், அவர் மரித்து போவார். அவரை ஊக்கப்படுத்தும் வார்த்தை ஒன்றை (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி) மருத்துவர்கள் இப்பொழுது உமக்கு ஒன்றும் செய்ய முடியாது என்று உமக்கு தெரியும், அந்த கட்டத்தை நீர் கடந்துவிட்டீர். உமக்கு ஒரே ஒரு தருணம் உள்ளது, அது கிறிஸ்து இயேசுவுக்குள். பாருங்கள். சகோதரனே, நீங்கள்... நானும் கூட ஒரு நாளில் மரிக்க வேண்டியவன் தான். இயேசு வர தாமதித்தால், நீங்களும் கூட மரிக்க வேண்டும். நான் உங்களை அங்கு நியாயத்தீர்ப்பில் சந்திக்க வேண்டியவனாயிருக்கிறேன். இன்றிரவு... 76தொலைகாட்சியில், நாம் விரலை அசைத்தாலும் கூட அது ஒவ்வொரு முறையும் தொலைகாட்சியில் பதிவு செய்யப்படுகிறது. நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் பதிவாகின்றது. தொலைகாட்சி ஒரு படத்தை தானாகவே உருவாக்குவதில்லை. அந்த ஒளி அலைகளை, அது கால்வாயின் வழியாக தொலைகாட்சி படக்குழாயினுள் செலுத்துகின்றது. ஆதாம் பூமியின் மேல் நடமாடின போது, மோசே சிவந்த சமுத்திரத்தைக் கடந்தபோது, எலியா கர்மேல் பர்வதத்தில் நடந்த போது, இந்த ஒளி அலைகள் உண்டாயிருந்தன. ஆனால் தொலைகாட்சி இப்பொழுது தான் கண்டு பிடிக்கப்பட்டது. நாம் அசைக்கும் ஒவ்வொரு அசைவும், நாம் இடும் ஒவ்வொரு சத்தமும் அங்கு பதிவாகி, நியாயத்தீர்ப்பின் போது நம்மை சந்திக்கும். நாம் அசைக்கும் ஒவ்வொரு அசைவும் அங்கு நம்மை சந்திக்கும். போதகர் என்னும் ரீதியில் நான் கூறும் வார்த்தைகள் அனைத்திற்கும் அங்கு நான் பதில் கூற வேண்டியவனாயிருக்கிறேன். தேவன் என்னை அதற்கு உத்தரவாதமாக வைப்பார். 77என்னால் முடிந்தால், நான் உங்களை சுகமாக்குவேன் ஏனெனில் உங்களுக்கு சில நாட்கள் மாத்திரமேயுள்ளன. உங்களுக்காக நான் ஜெபித்தேன். அது மாத்திரம் தான் எனக்குத் தெரியும். சகோதரனே, அந்நிலையில் அமர்ந்திருக்கும் ஒரு மனிதனுக்கு, என்னாலான அனைத்தையும் நான் செய்வேன். உங்களை ஒன்று நான் கேட்கிறேன். பாருங்கள், நீங்கள் ஏற்கனவே குணமாகிவிட்டீர்கள். ஏனெனில் இயேசு அவ்விதம் கூறியுள்ளார்: ''அவருடைய தழும்புகளால் நீங்கள் குணமானீர்கள்'' (1பேதுரு: 2: 24). உங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களானால், நீங்கள் இப்பொழுது மரிக்கமாட்டீர்கள். நீங்கள் உயிர் வாழ்வீர்கள். ஒளி அலைகள் நமது அறையின் வழியாக வருகிறதென்று. நாமறிவோம், ஆனால் நம்மால் அதை காண முடியவில்லை. நமது புலன்கள் அதை கிரகித்துக் கொள்ள முடியவில்லை. அதை கிரகித்துக் கொள்ள ஒரு தொலைகாட்சி பெட்டி அவசியமாயுள்ளது. அதுபோன்று, தேவன் இங்கு பிரசன்னராயிருக்கிறார். நாம் அவரைக் காண முடியவில்லை. ஆனால் அவர் இங்கிருக்கிறார் என்று நாமறிவோம். இயேசு கிறிஸ்து மாறாதவராயிருக்கிறார். பாருங்கள், இப்பொழுது தான் அவர் தம்மை வெளிப்படுத்தினார். சுகமாக்குதலைப் பொறுத்தவரையில் அவர் இங்கு நின்று கொண்டிருந்தால், இதைக் காட்டிலும் அவர் உங்களுக்கு அதிகம் செய்திருக்க முடியாது. தேவனுடைய குமாரன் இங்கு நின்று கொண்டிருந்தால், அவர் நின்று கொண்டிருக்கிறார், அவர் இங்கிருக்கிறார், இதை காட்டிலும் அவர் உங்களுக்கு அதிகம் செய்திருக்க முடியாது. ஏனெனில் அவர் ஏற்கனவே தம்மை இங்கு அடையாளம் காண்பித்துவிட்டார். பாருங்கள்? உங்களைச் சுகமாக்க இந்த இடத்தில் அவர் இருக்கிறார். 78அந்த சக்கர நாற்காலியில் அமர்ந்துள்ள ஸ்திரீ என்னிடம், “நீங்கள் தேவனுடைய ஆசிர்வாதங்களைக் கோரி எனக்கு குழந்தை பிறக்கும் என்று தீர்க்கதரிசனம் உரைத்தீர்கள். நீங்கள் உரைத்தபடியே எனக்கு குழந்தை பிறந்தது” என்றாள். அந்த ஸ்திரீக்கு களகண்டமாலைக்காக (goiter) அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் விளைவாக அவள் ஊனமுற்றாள், அத்தகைய சம்பவங்கள் நிகழ்வதை நாம் காண்கிறோம். சகோதரியே, நீ உத்தமமான கிறிஸ்தவள் என்று எனக்குத் தெரியும். தேவன் உன்னை ஏன் சக்கர நாற்காலியில் உட்கார வைத்துவிட்டார் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருக்கால் உன்னுடைய விசுவாசத்தை அதிகரிக்க அவ்வாறு செய்திருக்கலாம். அங்கிருந்து எழுந்து நடக்க நீ விசுவாசத்தைப் பெற முயன்று கொண்டிருக்கிறாய். நாம் இனிமேல் விசுவாசத்தைப் பெற முயல வேண்டாம். இப்பொழுதே அதை பெற்றுக் கொள்வோம். அவ்வளவு தான், சுகமாகுதல் இப்பொழுதே. தொடங்கிவிட்டது. நாம் சுகமடைந்துவிடுவோம் என்று முற்றிலுமாக விசுவாசியுங்கள். சக்கர நாற்காலிகளில் அமர்ந்துள்ளவர்களே, நீங்கள் எங்கிருந்தாலும் சரி, யாராயிருந்தாலும் சரி, கிறிஸ்து இங்கு பிரசன்ரைாயிருக்கிறார் என்பதை நினைவு கூருங்கள். 79“என்னுடைய படம் தொலைகாட்சி பெட்டியில் வருவதைப் போல் நீங்கள் காண்கிறீர்களா?'' என்று நீங்கள் கேட்கலாம். ஆம். இயேசு கிறிஸ்து இவ்வுலகிலிருந்தபோது பேசின வார்த்தைகளும் கூட இப்பொழுது இந்த அறையின் வழியாக சென்று கொண்டிருக்கின்றன. அது அழிந்து போவதே கிடையாது. அது விஞ்ஞானப் பூர்வமான உண்மை என்று எத்தனை பேருக்கு தெரியும்? (சபையோர், 'ஆமென்' என்கின்றனர் - ஆசி) . சரி, அது என்ன? எழுதப்பட்ட அந்த வார்த்தையை ஆவியானவர் பொறுக்கியெடுத்து அதை வெளிப்படுத்துகிறார். ஓ, மகிமை! அவர் இங்கு இருக்கிறார். ஆண்டவர் இப்பொழுது இந்த இடத்தில் இருக்கிறார். அவர் அதிகமாக செய்ததை நாம் அதிகமாக கண்டு, அதன் விளைவாக இடறிவிடுகிறோம். இது கட்டுக்கதை அல்ல, அல்லது வேத தத்துவ சொற்கள் அல்ல, கடைசிக் காலத்தில் அவர் தம்மை வெளிப்படுத்துவதாக வாக்களித்ததை நிறைவேற்ற அவர் தம்மை நமக்கு முன் இப்பொழுது வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார் என்று மாத்திரம் நாம் உணருவோமானால்! அது மிகவும் அற்புதமான காரியமல்லவா? அது அற்புதமல்லவா? (சபையோர் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி). 80இப்பொழுது நீ விசுவாசி, நீ விசுவாசிப்பாயா? நீ மரிக்கமாட்டாய் என்று விசுவாசி, நீ உயிர் வாழ்ந்து தேவனை கனப்படுத்தப் போகிறாய், நீ ஞானஸ்நானம் பெற்றிருக்கிறாயா? நீ ஒரு கிறிஸ்தவன் அல்லவா? தேவனுடைய மகிமைக்காக நீ உயிர்வாழ விரும்புகிறாய். அப்படியானால் என் சகோதரனே, போய் உயிர் வாழ்வாயாக! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உயிர்வாழ்வாயாக! சகோதரியே, நீ தேவனுடைய மகிமைக்காக நடந்து! உன் குழந்தையையும் கவனித்துக் கொள்ள விரும்புகிறாய். அப்படியானால், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எழுந்து நட நீங்கள் ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அப்படியே செய்யுங்கள். இன்றிரவு வெஸ்ட்டர்ன் ஹோம் விடுதியில் நடந்த இக்கூட்டத்தை மறந்து போக வேண்டாம். இங்கு தேவனுடைய பிரசன்னம் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டது. தேவன் பட்சபாதமுள்ளவர் அல்ல. நீங்கள் விசுவாசிக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். இப்பொழுது அவரை விசுவாசிக்கிறீர்களா? (சபையோர், 'ஆமென்' என்கின்றனர் - ஆசி). ஆமென். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. இப்பொழுது நாம் தலைவணங்குவோம். ஜெபம் செய்து கூட்டத்தை முடிக்க யாரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர் என்று எனக்குத் தெரியவில்லை. சகோ முஷிஜியன் இங்கிருக்கிறார். சகோதரனே, இங்கு வாரும். அவர் ஜெபம் செய்து கூட்டத்தை முடிப்பார். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக! கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக!